
Assistance to the value of Rs.62.40 lakhs of people grievance meeting; Collector presentation
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் 62.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஆசியாமரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
கூட்டத்தில் பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 313 மனுக்களை அளித்தனர். அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர், தாட்கோ மூலம் துப்புரவு பணியாளர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு ஹோட்டல், பவர்லூம், தையல் தொழில், கலவை இயந்திரம், சென்ட்ரிங் தொழில், அரிசி வியாபாரம், கார்மென்ட்ஸ் உள்ளிட்ட தொழில்கள் தொடங்கிட 17 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.24,000 மதிப்பிலான தையல் மெசின்கள் என 29 பேருக்கு ரூ.62.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ பழனிச்சாமி, சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் துரை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.