At the grievance Redressal day held in Perambalur district, 187 petitions were received
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி, மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா கோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பெரம்பலூர; வட்டாட்சியர் அலுவலகத்தில் 11 மனுக்களும், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் 8 மனுக்களும், குன்னம் தாலுகா அலுவலகத்தில் 9 மனுக்களும், ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் 5 மனுக்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாளுக்காக வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் 154 மனுக்கள் பெறப்பட்டு, மொத்தம் 187 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் ரசீது மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமுமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும், தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார்.