Buy any item, right price, the expiration date must be purchased after seeing the Registrar of Co-operative Societies Sivamuttukkumarasami
பெரம்பலூர் : உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.சிவ.முத்துக்குமாரசாமி தலைமையில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் பேசியதாவது:
நுகர்வோர் என்பவர் யார், அவர்களுக்கு என்ன கடமை, என்ன உரிமை இருக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் வல்லமை படைத்த மாணவ, மாணவிகளாகிய உங்களிடம் ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டுள்ள தரம், கலந்துள்ள பொருட்களின் குறியீடுகள், அனுமதிக்கப்பட்ட பொருட்கள், ஆகியவற்றின் விபரங்களையும் முக்கியமாக பார்க்க வேண்டும்.
ஒரு பொருளை வாங்கும் எந்த ஒரு நபரும் நுகர்வோராக கருதப்படுவார். அந்த வகையில் நாம் அனைவருமே நுகர்வோர்கள்தான். நாம் எந்த பொருளை வாங்கினாலும் அந்த பொருளில் உரிய விலை அச்சிடப்பட்டிருக்கிறதா என்றும், காலவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்றும் கண்காணிக்க வேண்டும்.
அதிக விலைக்கு பொருட்களை விற்றாலோ, காலாவதியாகிய பொருட்களை விற்றாலோ உடனடியாக நுகர்வோர் அமைப்பிடம் புகார் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும் நமக்கு இருக்கிறது. இந்த தகவலை நீங்கள் அறிந்து கொள்வதோடு உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் என அனைவரிடமும் இதுபற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என பேசினார்.
அதனைத் தொடர்ந்து உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் இரா.பேபி, மாவட்ட வழங்கல் அலுவலர் ப.கள்ளபிரான், பறக்கும் படை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.