கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை என்பது மலிவான அரசியல்! மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பெரம்பலூரில் பேட்டி!

schedule
2024-06-23 | 15:54h
update
2024-06-23 | 15:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

CBI investigation into Kallakurichi incident is cheap politics! MDMK Principal Secretary Durai Vaiko interviewed in Perambalur!


கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முறையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் பொழுது, மலிவான அரசியலுக்காக சிபிஐ விசாரணை கோருவது நியாயம் அல்ல என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நாடு முழுவதும் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பெரம்பலூரில் தெரிவித்தார்.

பெரம்பலூருக்கு கட்சியினர் திருமணத்திற்காக வந்த முதன்மை செயலாளர் துரைவைகோ செய்தியாளர்களிடம் பேசிய தாவது: துரை.வைகோ கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும், உயிரிழந்தவர்களுக்கும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தமிழக அரசும் காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் போதிய உதவிகளை செய்து வருகின்றார்கள். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிபிஐ விசாரணை வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய விஷயங்களையும் தேவையற்ற கருத்துக்களையும் சொல்வது மலிவான அரசியல் என்று கூறினார்.

சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, முன்னாள் நீதிபதியை கொண்டு தனி நபர் ஆணையம் உருவாக்கப்பட்டு விசாரணையை துவங்கி உள்ளது. தவறு செய்த அதிகாரிகளுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளி அவருக்கு உதவியாக இருந்தவர்கள் அனைவரையும் தமிழாக அரசு கைது செய்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முதல் சம்பவமோ அல்லது ஒற்றை சம்பவமோ கிடையாது. கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. தொடர்ச்சியாக கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற கள்ளச்சாராய சாவுகள் தொடர்கதையாகி வருகிறது. இது மட்டுமின்றி இதேபோல வடமாநிலத்தில் குஜராத், பீகார் உள்ளிட்ட பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களிலும் நாட்டையே உலுக்கிய கள்ளச்சாராயம் சாவுகள் நடைபெற்றது.

Advertisement

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி ஏற்கனவே இதே போல கள்ளச்சாராய வழக்கில் சிறை சென்று மீண்டு வந்தவர். அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. அவருக்கு பல்வேறு அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் உதவி செய்துள்ளார்கள். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பாரபட்சம் காட்டப்பட மாட்டாது என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்று கள்ளச்சாராயம் மட்டுமல்ல போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள், துணை நிற்பவர்கள் என்று அனைவரையும் கைது செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அதிகபட்சமாக மரண தண்டனை கூட வழங்கலாம் தப்பில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய துரைவைகோ, 57 பேர் சாவுக்கு காரணமானவர்களுக்கு அந்த தண்டனை சரியானதுதான் அதுமட்டுமில்லை எத்தனையோ நபர்கள் கண் பார்வையை இழந்து இருக்கிறார்கள். ஏழை எளிய மக்களை வீதிக்கு தள்ளி இருக்கிற இந்த கள்ளச்சாராயம் சாவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாவது வழங்க உரிய சட்டத்தை இயற்றி அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதுதான் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பய உணர்ச்சி வரும், நமது வாழ்வும் பறிபோகும் என்ற எண்ணத்தில் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டார்கள் என்று கூறினார். இதுபோன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒருங்கிணைக்க வேண்டும். மாறாக அரசியல் ஆதாயம் தேடுவது தவறானது என்று கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த செயல்பட வேண்டும், பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் நீட்டிற்கு எதிராக குரல் கொடுப்பதோடு போராட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். ஆனால் நீட் தேர்விற்கு சாதகமாக செயல்படக்கூடிய ஒரே ஒரு கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு 7.5% எதிர்த்து நீதிமன்றத்தை வழக்கு தொடுத்தது பாரதிய ஜனதா கட்சி. நீட் தேர்வில் வினாத்தாள் லீக் ஆன விவகாரம், கருணை மதிப்பெண் கொடுத்து விவகாரம் எல்லாமே பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் தான் மிக அதிகமாக உள்ளது. அது தொடர்பாக நீட் தேர்வு நடத்தக்கூடிய மத்திய அரசு அதிகாரியே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு தகுதி என்பதே தேவையில்லை. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் படிக்கிறார்கள் அதன் பிறகு எதற்கு மருத்துவராவதற்கு வேறு ஒரு தேர்வு வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நீட் தெர்வு பயிற்சிக்காக ஏழை எளிய மாணவர்கள் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரான ஒரு தேர்வு அதனை தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்ற அவர், தமிழக மக்களின் பிரச்சினைக்காகவும், திருச்சி தொகுதி மக்களின் மக்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மதிமுகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Tamil Nadu
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.03.2026 - 19:03:41
Privacy-Data & cookie usage: