Coimbatore: Thanks to the Chief Minister who announced 300 crore library, 600 crore Avinasi road flyover; KMDK ER Eswaran!
எங்கள் கோரிக்கையை ஏற்று கோவைக்கு 300 கோடியில் நூலகமும், 600 கோடியில் அவிநாசி சாலை மேம்பாலம் விரிவாக்க திட்டங்கள் அறிவித்த முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக வளர்ந்து வரும் மாநகரங்களில் கோவை முதலிடம் பிடிக்கிறது.
கோவையில் மனித வளம் அபரிமிதமாக இருக்கின்றது. அந்த வகையில் கோவைக்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவது கட்டாயமாகிறது. சென்ற சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணி இழந்திருந்தாலும் எந்த விதமான குறையும் வைக்காமல் கோவைக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 2021 இல் முதலமைச்சர் பதவியேற்ற போது வாக்கு அளிக்காதவர்களும் ஏன் வாக்களிக்காமல் போனோம் என்று நினைக்கும் வகையில் செயல்படுவேன் என்று சொல்லி இருந்ததை நிரூபித்து கொண்டிருக்கிறார்.
அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலம் நீலாம்பூர் சந்திப்பு வரை விரிவாக்கம் செய்யவில்லை என்றால் அந்தத் திட்டம் முழு பயன் தராது என்று நான் சட்டமன்றத்தில் கேள்வியாக வைத்த போது பரிசீலித்து நிறைவேற்ற படும் என்று மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் பதில் அளித்திருந்தார். அடுத்த நாள் பத்திரிகைகளிலே கோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் கோவைக்கான திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தான் கேட்கிறார் என்று செய்திகள் வந்தது. அந்த அவிநாசி சாலை விரிவாக்க திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்த மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் நன்றி. அதற்கு நிதி ஒதுக்கி திட்டம் செயல்படுத்தப்படும் என்று நேற்றைய தினம் கோவையில் அறிவித்திருக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கொங்கு மண்டல மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சென்னையிலே அறிஞர் அண்ணா பெயரிலே நூலகம், மதுரையில் கலைஞர் பெயரிலே நூலகம் செயல்படுத்திய தமிழக அரசு கொங்கு மண்டலத்திற்கு தந்தை பெரியார் பெயரிலே அதே போன்ற நூலகம் அமைக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் கேள்வி வைத்த போது கோவையிலும் உலக தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
சொன்னதை செய்யும் விதமாக கோவையில் தந்தை பெரியார் பெயரில் நூலகமும், அறிவியல் மையமும் அமைக்க நேற்றைய தினம் அடிக்கல் நாட்டி இருப்பதற்கு மீண்டும் கொங்கு மண்டல மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் கேட்டு இதையெல்லாம் செய்திருக்கின்ற முதலமைச்சர் கேட்காமலேயே 30 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப வளாகமும் மற்றும் பல திட்டங்களையும் அறிவித்திருக்கின்ற முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சென்னையை போன்று கோவைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டுமென்று டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அதை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி எடுத்து கொண்டிருக்கின்ற முதலமைச்சருக்கு நன்றி எனவும் அதில் தெரிவித்துள்ளார்.