Confident action to prevent contamination in the Jaggery: The Namakkal Colector sure to the farmers

ஜவ்வரிசியில் மக்காச்சோளம் கலப்படம் செய்வது முழுமையாக தடுக்கப்பட்டது போல், வெல்லத்தில் கலப்படத்தை தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கலப்படம் தடுக்கப்பட்டுள்ளதை, விவசாயிகள் ஒரு மாத காலத்திற்குள் உணர முடியும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நாமக்கல் ஆட்சியரக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பி.பாலமுருகன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்:

துரைசாமி: நாமக்கல் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் வேளாண் காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் செலுத்திய 24,000 விவசாயிகளில் 14,000 பேருக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு நிவாரணத்தொகை கிடைத்திட நடவடிக்கையெடுக்க வேண்டும்.
மலர் சாகுபடியில் ராசிபுரம் வட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது, இதனால் தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் நாமக்கல் மாவட்டத்தை இணைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். இதன் மூலம் மலர், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், மத்திய அரசு வழங்கும் மானிய திட்டங்களில் பயன்பெற முடியும்.

பெரியதம்பி: 2014-2015 ஆம் ஆண்டு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் போனஸ் வழங்கப்பட்டது. அதன்பிறகு வழங்கப்படவில்லை. வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.

சுந்தரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வாங்கும் விவசாயிகளில் இயற்கை வேளாண்மை செய்பவர்கள் உரம் வாங்க தேவையில்லை என மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கடன் அளவு நிர்ணய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. இந்த கால கட்டத்தில் தீவனங்கள் விலை இரு மடங்கு உயர்ந்துவிட்டன. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் தீவனங்களை கட்டாயப்படுத்தி திணிக்கும் செயலை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும்.
வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் வெள்ளை சர்க்கரையை கலப்படம் செய்து வருவதால், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் கலப்படத்தால் பொதுமக்களும் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ஆட்சியர்:வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெள்ளை சர்க்கரையை இருப்பு வைக்க கூடாது என ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த உணவுப் பாதுகாப்பு அலுவலர் முன்னிலையி்ல் ஆலை உரிமையாளர்களுக்கு கூட்டம் நடத்தப்படவுள்ளது. மேலும் ஆலைகளை கண்காணிக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை போன்று வெல்லம் தயாரிப்பில் கலப்படத்தை தடுக்க நடவடிக்கையெடுக்கப்படும். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் விவசாயிகள் இதனை உணர முடியும்.

சரவணன்: கேரளத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக அங்கும் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதனால் நிகழாண்டில் காய்கறி விலை உயரவில்லை.
மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையும் இல்லாததால் காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த கால மகசூல் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து காய்கறி பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும்.

பெரியசாமி: ராஜவாய்க்காலில் படர்ந்துள்ள குளிரி என்ற நீர் தாவரத்தால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாவரத்தை அகற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும், ராஜவாய்க்கால் பாசன விவசாயிகளின் கோரிக்கைகளை தெரிவிக்க, நீர்ப்பாசனத்துறை மாவட்ட தலைமை அதிகாரி முன்னிலையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். ராஜ வாய்க்கல் கரைகளை பலப்படுத்தி, கார், ஜீப் போன்ற வாகனங்கள் செல்லும் வகையில் கரைகளை சீரமைத்துக்கொடுக்க வேண்டும்.

குப்புதுரை: நாமக்கல் மாவட்டத்தில் காவிரி பாசன விவசாயிகளுக்கு தண்டத்தீர்வை என்ற பெயரில் ஹெக்டேருக்கு ரூ.500 வீதம் ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது. இந்த தீர்வையை ரத்து செய்ய வேண்டும். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முழு அரவைத்திறன் அளவுக்கு கரும்பு கிடைக்க கரும்பு விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் ராஜ வாய்க்கால், குமாரபாளையம், பொய்யேரி வாய்க்கால்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விட்டால் 5,000 முதல் 7,000 ஏக்கர் வரை கரும்பு சாகுபடி பரப்பு உயர வாய்ப்புள்ளது.

ஆட்சியர்: மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு அரவைப் பருவத்திலும் 4.5 டன் கரும்பு அரைக்க முடியும். ஆனால் அந்த அளவுக்கு ஆலைக்கு கரும்பு பதிவு செய்யப்படவில்லை. இதனால் காவிரி நீர் பாயும் பகுதிகளில் மோகனூர், பரமத்திவேலூர் வட்டாரங்களில் கோரை சாகுபடியை குறைத்துக்கொண்டு, கரும்பு பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும்.

நடேசன்: பசுக்களுக்கு மடி நோய் பாதிப்பு பரவலாக உள்ளது. இந்த நோய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீரா இறக்க உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தென்னை மரம் வைத்துள்ள விவசாயிகளுக்கு நீரா இறக்க அனுமதி அளிக்க வேண்டும். பள்ளிபாளையம் தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு வெட்டி அனுப்பி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பணம் கிடைக்கவில்லை.

ஆலை அலுவலர்: விவசாயிகளுக்கு அக்டோபர் 31 வரை பணம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் பணம் வழங்கப்பட்டு விடும்.

ஆட்சியர்: இதனை ஏற்க முடியாது. கரும்பு வழங்கிய 15 நாட்களுக்குள் விவசாயிக்கு பணம் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 45 நாட்கள் வரை தாமத்தப்படுத்திய நிலையில் மேலும் கால அவகாசம் கோருவது ஒப்பந்தத்தை மீறும் செயல். பொருளாதார சிக்கல்களை காரணம் காட்டி விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் காலம் தாழ்த்தக்கூடாது. உடனடியாக பணம் விநியோகம் செய்ய ஆலை நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

வையாபுரி: பரமத்திவேலூர் ராஜ வாய்க்கால் பகுதியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட கரைப்பகுதிகளை, நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் தேவையில்லை என்ற நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்படுகிறது. இதனால் கரூர் மாவட்டத்திற்கு மேல் பகுதி வரை உள்ள வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அணையில் இருந்து 1,000 கன அடிக்கு குறைவில்லாமல் தண்ணீர் திறக்க அரசுக்கு மாவட்ட நி்ர்வாகம் பரிந்துரைக்க வேண்டும்.

தங்கமணி: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாத கரும்புக்கு டன்னுக்கு ரூ.200 வரை குறைந்து வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை கைவிட்டு பதிவு செய்த கரும்புக்கு வழங்கப்படும் விலையையே வழங்க வேண்டும், ஆலையில் இணை மின் உற்பத்தி நிலைய பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் பணிகள் முடிவு பெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!