Cotton cultivation in rainfed legume intercropping can: in Perambalur agricultural Dept. inform
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சந்திரன் விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவை மானாவாரி பயிர்களாக பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மானாவாரி நிலங்களில் பயிர்கள் சாகுபடி செய்ய ஏதுவாக நல்ல மழை கிடைத்துள்ளது மற்றும் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2016-ம் ஆண்டானது சர்வதேச பயறு வகைகள் ஆண்டாக கடைப்பிடிக்கபட்டு வரும் வகையில் நடப்பாண்டில் பயறுவகை உற்பத்தியை பெருக்கும் பொருட்டு மானாவாரி நிலங்களில் பருத்தி விதைப்பு செய்த நிலங்களில் ஊடுபயிராக பயறு வகை பயிர்களான துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் நிலங்களில் மண்வளம் மற்றும் வருமானம் அதிகரிக்கிறது.
மேலும் நடப்பாண்டில் நெல் சாகுபடிக்கு ஏற்ற நெல் இரகங்களான CO-50, CO-51, ADT-50, ADT-45 மற்றும் பயறு சாகுபடிக்கு ஏற்ற உளுந்து இரகங்களான சேகர்-1, வம்பன்-5, வம்பன்-6 ஆகியவை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்லுக்கு கிலோவிற்கு ரூ.10- மானியம் வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பயறு வகை விதைகளுக்கு, உளுந்து விதைகள் கிலோவிற்கு ரூ.25- மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின்கீழ் உளுந்து செயல் விளக்கம் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.5000- மானியமும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உளுந்து வரிசை நடவு மேற்கொள்ள ஹெக்டேருக்கு ரூ.1000- மானியமும் வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் விதை மற்றும் இடுபொருள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் பிரதி வாரம் சனிக்கிழமையும் செயல்படும், என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.