Credit Assistance Schemes by TAMCO for Minority People – Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தனி நபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும், தனி நபர் கடனில் வருடத்திற்கு ஆண்களுக்கும் 8 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சமும், ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரை வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீத, மாணவியர்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடன் உதவி வழங்கப்படுகிறது.

கடன் மனுக்களுடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெரும் தொழில் குறித்த விவர திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கிக் கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் மேற்காணும் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பினால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர; அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!