Credit to Socio-Economically Backward Minority Craftsmen: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் VIRASAT என்ற கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளின்படி குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

கடன்தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000/-மும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,20,000/-மும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 4% வட்டி வீதத்திலும் ஆண்களுக்கு 5% வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் (NMDFC) மூலம் 90% கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) மூலம் 5% கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரரின் பங்குத்தொகை 5% -மும் சேர்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம், பெரம்பலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!