Delhi State Government’s way to improve government schools : Dharmapuri MP Anbumani

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைக் கட்டுப் படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறி வரும் நிலையில், இப்பிரச்சினைக்கு அற்புதமானத் தீர்வை கண்டுபிடித்திருக்கிறது தில்லி மாநில அரசு. பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளையும், சிறப்புப் பயிற்சி மூலம் ஆசிரியர்களின் திறனையும் மேம்படுத்தியதால் அங்குள்ள பள்ளிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது.

தில்லி மாநில அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளும், கற்பித்தல் முறையும் இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் இல்லாததால், அங்கு பயின்று வந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறத் தொடங்கினர். இத்தகைய சூழலில் 2014-ஆம் ஆண்டு தில்லியில் பொறுப்பேற்ற அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அதிரடியான திட்டங்களைச் செயல்படுத்தியதால் அரசு பள்ளிகளில் கல்விச் சூழல் தலைகீழாக மாறியிருக்கிறது. சுகமான, சுமையில்லாத, விளையாட்டுடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு கட்டாயமாகவும், இலவசமாகவும் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா வலியுறுத்தி வருகிறார். அதைத் தான் தில்லி அரசு செயல்படுத்தியுள்ளது.

கற்பித்தலை எளிமையானதாகவும், சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும் மாற்ற நினைத்த தில்லி அரசு, முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் 200 ஆசிரியர்களை ஃபின்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தது. அதன்பின்னர் படிப்படியாக 1000 அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் இந்த நாடுகளுக்கு அரசு செலவில் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவர்களைக் கொண்டு மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 45,000 ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்க தில்லி அரசு திட்டமிட்டிருக்கிறது. உலகிலேயே தரமான கல்வி வழங்குவதில் முதலிடத்தில் இருப்பது ஃபின்லாந்து தான். அங்கு ஆசிரியர்கள் பெற்ற பயிற்சிகளின் பயனாக தில்லி பள்ளிகளில் கற்றல் என்பது சுமையற்ற அனுபவமாக மாறியுள்ளது.

அடுத்ததாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் 8&ஆம் வகுப்பு வரை தினமும் ஒரு பாடவேளை, அதாவது 45 நிமிடங்கள் மகிழ்ச்சிப் பாடவேளையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடவேளையில் பாடங்கள் நடத்தப்படாது; மாறாக தியானம் மேற்கொள்ளுதல், கதை சொல்லுதல், மாணவர்களுக்கு பிடித்த விஷயம் தொடர்பான வினா & விடை, நீதி போதனை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. இது கற்றலை சுகமான அனுபவமாக மாற்றியிருக்கிறது. அதுமட்டுமின்றி, அரசு பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், மனதைக் கவரும் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன், மரங்கள் நடப்பட்டு பசுமையான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே வேதனையாக உள்ளது. தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட வில்லை. புதியப் பாடத்திட்டம் குறித்தும் கூட இதுவரை முழுமையான பயிற்சி வழங்கப்படவில்லை. பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. எந்த முன்னேற்பாடும் இல்லாமல் ஆங்கிலவழிக் கல்வியை தொடங்குவதாலும், அங்கன்வாடிகளை மழலையர் வகுப்புகளாக மாற்றுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். தில்லியில் மூடும் நிலையில் இருந்த பள்ளிகளுக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதிலிருந்தே அரசு பள்ளிகள் தொடர்பான தில்லி அரசின் அணுகுமுறையையும், தமிழக அரசின் அணுகுமுறையையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

தில்லி அரசு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சிக்கு மற்றொரு காரணம் கல்விக்காக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது தான். 2013&ஆம் ஆண்டு தில்லியில் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.2,219 கோடி மட்டும் தான். 2014&ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி அரசு இந்த ஒதுக்கீட்டை இரு மடங்குக்கும் கூடுதலாக, ரூ.4570 கோடியாக உயர்த்தியது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக ஒதுக்கப்பட்ட கல்விக்கான நிதி ஒதுக்கீடு நடப்பாண்டில் ரூ.13,999 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பான ரூ.53,000 கோடியில் 26% ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தில்லியில் கல்விக்கான ஒதுக்கீடு 531 விழுக்காடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.16,965 கோடியிலிருந்து ரூ.27,205 கோடியாக வெறும் 60% மட்டும் தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழகத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த எந்த வகையிலும் போதாது.

தில்லியில் மொத்த பட்ஜெட் மதிப்பில் 26% பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதே அளவு ஒதுக்கீடு செய்வதாக வைத்துக் கொண்டால், மொத்த பட்ஜெட் மதிப்பான ரூ.1,93,742 கோடியில் ரூ.50,372.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பா.ம.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பாண்டிற்கான நிழல் நிதிநிலை அறிக்கையில் கூட பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசோ கிட்டத்தட்ட அதில் பாதியைத் தான் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் வளராமல் சீரழிவதற்கு இது தான் முக்கியக் காரணமாகும்.

ஒரு மாநிலத்தில் அரசு பள்ளிகள் வளராமல் அம்மாநிலத்தில் உண்மையான கல்வி வளர்ச்சி ஏற்படாது. எனவே, பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை முதல் கட்டமாக மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% அல்லது மொத்த பட்ஜெட் மதிப்பில் 25% என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பன்னாட்டு அளவிலான பயிற்சி, பள்ளிகளில் உலகத்தர கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாடத்திட்டத்தை உருவாக்கி அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!