பெரம்பலூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் : ஆட்சியர்

schedule
2017-08-28 | 15:52h
update
2026-07-03 | 11:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Dengue prevention activities at Perambalur: Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுசுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட மன்றத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்குநோயை தடுக்கும் பொருட்டு வட்டாரத்திற்கு 20 களப்பணியாளர்களும், பேரூராட்சிகளில் தலா 10 களப்பணியாளர்களும், நகராட்சியில் 20 களப்பணியாளர்களும் என மொத்தம் 140 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்களப்பணியாளர்கள் அனைவரும் வீடுவீடாக சென்று டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து “அபேட்” மருந்தினை விட்டு கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் கொசு தண்ணீரில் அமர்ந்து முட்டையிடுவதை தவிர்க்க பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை நன்றாக மூடிவைக்க வேண்டும். வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலரவைத்து பிறகு தண்ணீரை நிரப்ப வேண்டும்.

வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர் தேங்காய் மட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்களிடையே களப்பணியாளர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும். மேலும் காலியாக உள்ள வீட்டு மனைகளில் உள்ள புதர், செடி மற்றும் கொடிகள் மூலமாக கொசுப்புழுக்கள் உற்ப்பத்தியாவது கண்டறியப்பட்டால், உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், பொது மக்கள் அனைவரும் காய்ச்சல் என்றால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அனுகி தேவையான சிகிச்சையை பெற வேண்டும். காய்ச்சல் பரப்பும் கொசுக்களை அழிக்க வீட்டில் கொசுவலை மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம். முதிர்ந்த கொசுக்களை ஒழிக்க பகல் நேரங்களில் வீடுகளில் புகைமருந்து அடிக்க வேண்டும்.

மழைக்காலங்களில் நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்காமல் உடனடியாக அகற்றிட தேவையான நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும்.

எனவே மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்ததுவமனை கண்காணிப்பாளர், தருமலிங்கம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவர் அரவிந்த், இளநிலை பூச்சியியல் வல்லுநர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல்அலுவலர்கள் உட்பலர் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 11:50:02
Privacy-Data & cookie usage: