DMK-VCK Clash: Protest Turns into a Battlefield as Demonstrators Defy Police Ban and Trespass; Shops Shut and Traffic Paralyzed in Kunnam! Many Injured, Including the DMK IT Wing District Secretary!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விசிக, திமுக கட்சியினர் ஒருவரை ஒருவர் மீது கற்களை வீசித் தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஆதரவு கரம் நீட்டிய விசி கட்சியின், சட்டமன்ற உறுப்பினர் வன்னியயரசு என்பவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி தனது பக்கத்தில், ” என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?” என்றும், அதனைத் தொடர்ந்து “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி — புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!” என்று பதிவிட்டு இருந்தார்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பெரம்பலூர் உள்ளிட்ட பல ஊர்களில் விசிக கட்சியனர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், ஆ.ராசாவை கண்டித்து குன்னம் பேருந்து நிலையத்தில் விசிக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
அதே போல திமுகவினரும் ஆ.ராசாவை தரக்குறைவாக பேசிய குன்னம் தொகுதி விசிக மாவட்ட செயலாளர் அன்பானந்தத்தை கண்டித்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக இளைஞர் அணி சார்பில் அனுமதி கேட்டிருந்தனர். இரு கட்சியினரும், அனுமதி கேட்டிருந்ததால் இருவருக்கும் அனுமதி மறுத்த போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் போலீசாரின் தடையை மீறி இரு தரப்பினரும் எதிரெதிர் திசையில் ஆர்பாட்டம் நின்றிருந்தனர். அப்போது இரு தரப்பினரையும் போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்த நிலையில், இருகட்சியினரும் ஆரவாரம் செய்ததால், திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் கற்களாளையும், கட்டைகளையும் எடுத்து வீசிக் கொண்டதால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர். ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்ற காட்சிகளும், காரில் ஏறி தாவிக்குதித்து மோதல்கள் நடந்த சம்பவம் தீடீர் போர்க்களம் போல் போராட்டம் மாறியது. போலீசார் இருதரப்பினரையும் அறவழியில் கலைந்து போக செய்தனர். அரியலூர் சாலைப்பகுதியில் திமுகவினரையும், குன்னம் அரசு பள்ளிக்குகள் விசிக வினரையும் பாதுகாப்பு செய்து இருதரப்பையும் கலைந்து போக செய்தனர்.
இச்சம்பவத்தால், குன்னம் கடைவீதியில் இருந்த ஓட்டல்கள், டீக்கடைகள் ஓரிரு மணி நேரம் அடைக்கப்பட்டன. பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் போக்குவரத்து ஸதம்பித்தது. ஏ.எஸ்.பி பாலமுரகன் தலைமையிலான போலீசார் உடனடியாக சரிசெய்தனர். அதிவிரைவுப்படை, அதிரடிப்டை, ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு குன்னம் தொகுதியில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பிற்காக குவித்துள்ளனர். மேலும், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கள் ரவுண்ட்ஸ் வந்து கொண்டுகள்ளனர்.
திமுக IT Wing மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் விசிக வினர் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், குன்னத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஆயுதம் ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை புகார்கள் எதுவும் போலீஸ் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டைகுழல் துப்பாக்ககியாக செயல்பட்ட திமுக, விசிக கூட்டணி பேசு பொருளாக மாறி உள்ளது.
மேலும், இது குறித்து ஆ.ராசா எம்.பி அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஆரோக்கியமான கருத்து மோதலே
ஜனநாயகத்திற்கு அரண்!
கரமோதலும் களமோதலும்
ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம்!
‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’
என்ற கலைஞரின் முழக்கத்தை
இதயத்தில் ஏந்துவோம் ! என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் திமுக விசிக மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் இந்த மோதல் குறித்து பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தில் வழக்கம் போல தடியடி நடத்தி கலைக்காமல், போலீசார் சமயோசிதமாக செயல்பட்டு, பேசிப்பேசியே பெரிய வன்முறை தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.