Drifts in child rearing. Part – 2. Writer: JJ

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

சென்ற வார கட்டுரையில் குழந்தை வளர்ப்பு பற்றிய மேலோட்டமான ஒரு பார்வையை பதிவு செய்திருந்தேன்.அந்த கட்டுரைக்கு பாசமிகு வாசகர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுகளும்,விமர்சனங்களும் வந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

சில வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்ற வார கட்டுரையின் இரண்டாம் பாகத்தை எழுத விழைகிறேன்.இந்த இரு கட்டுரை தொடர்பான தாங்களின் மேன்மையான கேள்விகளும்,அதற்குண்டான பதில்களும் அடுத்த வாரம் பதிவு செய்யபடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.தங்களின் கேள்விகளை தலைமை அலுவலகத்திற்கோ,அல்லது jayachandrashekar2811@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.

இந்த வாரம் பெற்றோரின் பொறுப்பு மற்றும் கவன குறைவு பற்றி ஒரு அலசல்.

அன்றாடம் வேலை செய்து தினகூலியாக இருக்கும் தம்பதியினர் கூட இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை பெற்று கொள்ளுகிறார்கள்.பெரிதாக எந்த வசதியும், சுகாதாரமும் இல்லா தமது வீட்டிலோ அல்லது மருத்துவ மனையிலோ தான் பிரசவம் நடக்கிறது.ஆனால் மிக உயர்ந்த பொறுப்பில் நன்றாக சம்பாதிக்கும் மேல்தட்டு மக்கள் எல்லா வசதிகளுடன் கூடிய உயர்தர மருத்துவமனையில் பிரசவம் பார்கிறார்கள்.எல்லா விதத்திலும் வசதியாக இருக்கும் இவர்கள் கூறும் ஒரே வாக்கியம் ஒன்று மட்டும் போதும் இதற்கு மேல் எங்களால் முடியாது என்பதே.அப்படி என்ன தான் இவர்கள் கஷ்டத்தை அனுபவித்துவிட்டார்கள். இவ்வாறு பேசும் அனைத்து பெற்றோர்களும் சுயநலவாதிகளே தாங்கள் குழந்தைகள் வளரும் போதும் சரி, வளர்ந்த பின்பும் சரி, தனி மரமாக்கப்படுகிறார்கள்.குழந்தைகள் தமது தனிமையை போக்க கூடா நட்பில் இணைந்து வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவர்களும் உண்டு .ஒற்றை குழந்தையாக வளரும் போது யாருடனும் தங்களது உடைமைகளை பங்கிட்டு கொள்ளாமல் ,யாருடனும் அனுசரிக்காமல்,பிடிவாதங்களுடனும்,வேண்டா பழக்கங்களுடனும் வளருகின்றனர்.இந்த செயலால் தான் நினைத்ததை அடைந்தே தீரவேண்டும் என்பதற்காக எந்த ஒரு குறுக்கு வழியையையும் யோசிக்க தவறுவதில்லை .

தொழில் நுட்ப வளர்ச்சியால் பெற்றோர்கள் தம் குழந்தைகளுடன் போதுமான ஒதுக்க முடியாமல் போகிறது .இதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கும் தொழில் நுட்பத்தை திணிக்கிறார்கள்.குழந்தைகள் தானே அவர்களும் எளிதில் தொழில் நுட்பத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.இதனால் குழந்தைகளுக்கு உடற்பயிற்ச்சியோ,வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என்ற உந்துதலோ அறவே காணாமல் போய் விடுகிறது.

பெற்றோரின் நேரமின்மை காரணமாக குழந்தைகள் கேட்கும் முன்னரே அவசியமே இல்லாத நேரத்தில் கூட பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமாகவே எதுவாகினும் வாங்கி குவித்து விடுகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர் என்ற சிந்தனை இல்லாமல் பொய் விடுகிறது.பெற்றோரோர் மீதும் சமுதாயத்தின் மீதும் ஒரு அலட்சியமான போக்கு ஏற்பட்டு விடுகிறது.பெற்றோர் புறக்கணிப்பால் குழந்தைகளிடம் அலட்சிய போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து அவன் ஒரு தனி தீவாகவே வாழ ஆரம்பித்து விடுகிறான்.

பெற்றோர்கள் அடுத்து குழந்தைகள் தங்களது அதிக நேரத்தை ஆசிரியர்களிடம் செலவிடுகின்றனர்.பள்ளி பருவத்தில் ஆசிரியர், மற்றும் குழந்தைகள் பயிலும் பள்ளியும் பெரும் பங்கு வகிக்கிறது.இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்துவம் உண்டு என்பதை மறுக்க முடியாது.ஆனால் பெரும்பாலான பெற்றோர்களும்,ஆசிரியர்களும் அக்குழந்தையின் தனித்துவத்தை கண்டுபிடித்து மெருகேற்ற எவ்வித முயற்ச்சியும் எடுப்பதில்லை, மாறாக மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்றி விடுகிறார்கள்.

பெரியவர்களின் இந்த மன போக்கு அப்பிஞ்சு குழந்தைகள் உடலாலும் உள்ளதாலும் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி சிறிதேனும் கவலைப்படுவதில்லை. இந்த அலட்சிய போக்கால் குழந்தைகளிடம் ஒரு வெறுப்புணர்வும், தன்னம்பிக்கையும், காணாமலேயே போய் விடுகிறது. இந்த மனநிலையில் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் எந்தவொரு சிறு விஷயத்தையும் தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் வீணாகிவிடுகின்றனர்.

பெற்றோரின் வேலை பளு காரணமாக குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ,சமூக அறிவு,உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்,நம் பாரம்பரிய பண்பாடு,குடும்பத்திலும்,சமுதாயத்திலும்,நடந்து கொள்ள வேண்டிய விதம், எது சரி, எது தவறு,என்பது பற்றிய விவாதித்து தெரியப்படுத்த வேண்டிய பொறுப்புணர்வு, குழந்தைகளுக்கு அவர்களது பொறுப்புக்களை உணரவைத்தல்,மனிதாபிமானம், பெரியோரை மதிப்பதில் பெற்றோர்கள் முன்னுதாரணமாக இருக்க தவறியது,இது போன்ற பல்வேறு விஷயங்களில் பெற்றோர்கள் வளரும் குழந்தைகளுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

நாம் எண்ணங்களையும் செயல்களையும் பார்த்து தான்,நம் பிம்பங்களாக வளருகின்றன.நாமே மோசமான முன்னுதாரணமாக இருக்கிறோம் என்பது தான் அனைவரும் ஒரு மனதாக ஒப்பு கொள்ள வேண்டிய வேதனைக்குரிய விஷயம்.

குழந்தைகளுக்கு சிறிதேனும் பெற்றோர்கள் நேரம் ஒதுக்க,அவர்களது விருப்பு,வெறுப்புகளை தெரிந்து கொண்டு ,அன்பாக பேசி ,சந்தோஷமோ, துக்கமோ, ஏதுவாகிலும் கட்டியணைத்து, குழந்தைகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டு, அவர்களது ஆலோசனை சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை செயல்படுத்தி, தவறு எனும் பட்சத்தில் அதற்கு உண்டான காரணங்களை, கூறி புரிய வைத்து,இவ்வாறாக தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அதிமுக்கிய கடமையாகும்.

எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பு நம் கையில் உள்ளது.அதில் சிறிதேனும் பிழை நேரினும் பாதிக்கப்படுவது நம் குழந்தைகள் மட்டும் அல்ல சிதைந்து போவது நம் கனவும் தான் என்று கூறி ,இக்கட்டுரையில் தங்கள் மேலான கருத்துக்கள், விமர்சனங்கள்,கேள்விகளை எங்களுக்கு தயைகூர்ந்து அனுப்புமாறு கேட்டு கொண்டு இத்துடன் முடிக்கிறேன்

இவண்- ஜெ ஜெ


Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!