During the one year rule led by DMK, public welfare schemes have been successfully implemented in Perambalur district: Collector Information!
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, பெரம்பலுார் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் விளக்கும் வகையில் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுவரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளையும், விளாமுத்துார் பகுதியில் சாலை மேம்பாட்டுப்பணிகளையும், பொதுப் பணித்துறையின் சார்பில் அரசு தலைமை மருத்துவமனை அருகே மேலேரி வரத்து வாய்க்கால் துார்வாரும் பணிகளையும், ஆலம்பாடி சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகள் குறித்தும் செய்தியாளர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தம்பிரான்பட்டி பகுதியில் பயனடைந்து கொண்டிருக்கும் பயனாளிகளின் வீட்டுற்கு சென்று அவர்களிடம் மருத்துவக் குழுவினர் நேரில் வந்து அளிக்கும் சிகிச்சை முறை குறித்து செய்தியளார்கள் முன்னிலையில் கேட்டறிந்தார்.

பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறையின் சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் மூலம் தம்பிரான்பட்டி பகுதியில் உழவர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வேளாண் கருவிகளின் பயன்பாடு குறித்தும், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள நலத்திட்டத்தினால் விவாசயிகள் அடைந்துள்ள பயன்பாடு குறித்தும் செய்தியாளர்களிடையே விவாசயிகள் எடுத்துக் கூறினார். தோட்டக் கலைத்துறையின் மூலம் பொம்மனப்பாடி கிராமத்தில் அரசின் மானிய உதவியுடன் திராட்சை பயிரிட்டுள்ள வயலை பார்வையிட்டனர்.

கடைகோடி மக்களின் கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனி துறைஉருவாக்கப்பட்டு மக்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் பெரம்பலுார் மாவட்டத்தில் பெறப்பட்ட 3,481 மனுக்களுக்கும் தீர்வுகாணப்பட்டுள்ளது. இதில், 32 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 1,164 நபர்களுக்கு ரூ.4.26 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். அந்த வகையில், நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் திட்டத்தின் மூலம் தற்போது வரை 20,285 நபர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.

மேலும், 15 திருநங்கைகள், 183 மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு திட்டத்தின் மூலம் 47,600 ஏழைத்தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றுள்ளவர்களில் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பெரம்பலுார் மாவட்டத்தில் 14,066 பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ரூ.51.62கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 30,489 நபர்களுக்கு 31,248 நோய்கள் கண்டறியப்பட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நடக்க இயலாத நபர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை, தொற்றா நோய்களான இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை வியாதிகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதன் மூலம் இறப்பு விகிதம் குறைக்கப்படும். வீடுதேடி சென்று சிகிச்சை அளிக்கும்போது அந்த வீடுகளில் உள்ள குழந்தைகளை பரிசோதித்து பிறவி குறைபாடுகள் உள்ளதா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

பெரம்பலுார் மாவட்டத்தில் இரத்தக்கொதிப்பு உள்ள 40,075 நபர்களுக்கும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 33,192 நபர்களுக்கும், இவை இரண்டாலும் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த நிலையில் உள்ளள 16,613 நபர்களும் என மொத்தம் 91,000 நபர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்ப்படுகின்றது.

பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துப்பணிகள் சேவைக் கழகத்தின் மூலம் ரூ.20.10லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய வசதியினை பெற்றுள்ளோம். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இதுவரை 12 முகாம்கள் நடத்தப்பட்டு 5,984 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஏழை,எளிய குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.4,000 வழங்கிய திட்டத்தின் மூலம் 1,83,561 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.73.42கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒற்றை பெற்றோரை இழந்த 116 குழந்தைகளுக்கு தலா ரூ.3லட்சம் வீதம் ரூ.3.48கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பெற்றோரையும் இழந்த ஒரு குழந்தைக்கு ரூ.5லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலுார் மாவட்டத்தில் ஆலம்பாடி, எளம்பலுார் மற்றும் பரவாய் ஆகிய பகுதிகளில் உள்ள சமத்துவபுரங்கள் புணரமைப்பு செய்யும் பணிகளுக்கு ரூ.2.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.

பெரம்பலுார் மாவட்டத்தின் தொன்மையினை விளக்கும் வகையில் புதைபடிவ பூங்கா அமைக்க ரூ.10கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் நிலையில் உள்ளது. வருவாய்த்துறையின் சார்பில் பட்டாக்களில் பெயர்,முகவரி மாற்றம், சிறுதிருத்தம் மேற்கொள்ளும் வகையில் 152 கிராமங்களுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 615 பயனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 15 மண் சாலைகள் தார்ச்சாலைகளாகவும், 5 மண் சாலைகள் பேவர் பிளாக் சாலைகளாகவும் மாற்ற ரூ.115.56 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குரும்பலுார் பேரூராட்சியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. பெரம்பலுார் நகராட்சியில் ரூ.115லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உழவர்நலன் மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் மூலம் 41 வருவாய் கிராமங்களில் 300 விவசாயிகள் பயடைந்துள்ளனர் . இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் கறவைமாடு, 10 ஆடுகள், 15 நாட்டுக்கோழிகள், தேனீப்பெட்டிகள், 32 பழமரக்கன்றுகள் என தலா ரூ.45,000 மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் மூலம் 5 விவசாய குழுக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் பெரம்பலுார் மாவட்டத்தில் 1,153 விவசாயிகளுக்கு ரூ.12கோடி மதிப்பிலான மின் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் மூலம் தற்போதுவரை 14,594 முதியோர்களுக்கும், 4,258 மாற்றுத்திறனாளிகளுக்கும், 17,621 ஆதரவற்ற விதவைத்தாய்மார்களுக்கும் மதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

40 வயதைக் கடந்த 14 திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது. முதலமைச்சரின் சிறப்பு துார்வாரும் திட்டத்தின் மூலம் பெரம்பலுார் மாவட்டத்தில் 40 நீர்வழித்தடங்கள் ரூ.2.485 கோடி மதிப்பீட்டில் துார்வாரப்பட்டு வருகின்றது. 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை குறைத்திடும் நோக்கத்தில், விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சை வழங்கும் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 154 பயனாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்ட காவல்துறையின் சார்பில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பிரதிபலிப்பான்கள், பகலிலும் எச்சரிக்கையூட்டும் சிவப்பு விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் 50 இடங்கள் கண்டறியப்பட்டு விபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறுகின்றது. நாரணமங்கலம் பகுதியில் இதுபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக கடந்த இரண்டாண்டகளில் 20 விபத்துகள் நடத்த நிலை மாறி தற்போது ஓராண்டாக எந்தஒரு விபத்தும் நடக்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளது, என ஏ.டி.எஸ்.பி பாண்டியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாண்டியன், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், மருதையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், உழவர்நலன் மற்றும் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கருணாநிதி, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!