படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2021-08-13 | 18:58h
update
2021-08-13 | 18:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Educated unemployed youth get loans with subsidy to start businesses: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க உற்பத்தி பிரிவில் ரூ.15 லட்சம் வரையிலும், வியாபாரம் மற்றும் சேவைப்பிரிவில் ரூ.5 லட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூபாய் 2,50,000/- வரை தமிழக அரசு வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 5,00,000/- வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும்.

Advertisement

தகுதியான தொழில்களாக நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம். திட்ட இலக்கீடாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2021-22 ஆம் நிதியாண்டில் 280 நபர்கள் பயன்பெற ரூபாய். 240.00 லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் 30.09.2021 வரை வழங்கப்படும் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, படித்த வேலைதேடும் இளைஞர்கள் தொழில் துவங்கிட இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04328 – 225580, 224595 என்ற தொலைபேசியிலோ அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில், பெரம்பலூர்-621212 அலுவலகத்தை நேரிலோ அணுகி தேவையான விபரங்களை பெற்று கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 10:25:15
Privacy-Data & cookie usage: