Electronic voting machines in Perambalur, sealed in the presence of political parties
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021- இன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் சப் – கலெக்டர் அலுவலகத்திலுள்ள காப்பறையிலும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மத்திய காப்பறையிலும் வைத்து சீலிடப்பட்டிருந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய காப்பறைக்கு மாற்றிடவும், பழுதடைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுரில் உள்ள BHEL நிறுவனத்திற்கு அனுப்பிடுவதற்காகவும், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள காப்பறை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கடபிரியா முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக திறக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மத்திய காப்பறையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக திறக்கப்பட்டு, பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலக காப்பறையில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் மத்திய காப்பறையில் வைத்து கலெக்டர் வெங்கடபிரியா முன்னிலையில் சீலிடப்பட்டது.
மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பால்பாண்டி, தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.