Entrance Confusion: Anna University Vice-Chancellor must remove the Surappa! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ. மற்றும் எம்.டெக் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை மட்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். துணைவேந்தர் சுரப்பா ஆணைப்படி வெளியிடப்பட்டுள்ள, வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொறியியல், அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகளான எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் ஆகியவற்றில் சேருவதற்காக தமிழ்நாடு பொதுநுழைவுத்தேர்வு(டான்செட்) என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கான அறிவிக்கை எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்த்திருந்த பொறியியல் உள்ளிட்ட பட்டதாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் அளித்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஊடகங்களில் நேற்று வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு(AUCET) என்ற பெயரில் தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள், மற்ற பல்கலைக்கழகங்களின் ஆளுகையில் செயல்படும் கலை – அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தொடக்கம் முதலே டான்செட் நுழைவுத்தேர்வை நடத்தி வந்த அண்ணா பல்கலைக்கழகம், இப்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதற்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வை நடத்திக் கொள்வதை ஏற்க முடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளின் முதுநிலை பொறியியல், கணிணி பயன்பாடு, வணிக நிர்வாகம் உள்ளிட்ட படிப்பை படிக்க விரும்புவோர் தனியாக டான்செட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். டான்செட் நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பதிலாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்திக் கொள்ளும் என்றாலும் கூட, ஒரே படிப்புக்கு, ஒரே மாநிலத்தில் இரு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்களை தள்ளிய பாவத்திலிருந்து அண்ணா பல்கலை தப்ப முடியாது.

இளநிலை பட்டப்படிப்பாக இருந்தாலும், முதுநிலை பட்டப்படிப்பாக இருந்தாலும் நுழைவுத் தேர்வு கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனாலும் சில கட்டாயங்கள் காரணமாக முதுநிலை தொழில்படிப்புகளுக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் நுழைவுத்தேர்வை ஏற்க வேண்டியதாகியுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு நுழைவுத்தேர்வு, மற்ற கல்லூரிகளுக்கு தனி நுழைவுத் தேர்வு என இரு நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் மீது அண்ணா பல்கலைக்கழகம் திணிப்பது தேவையற்றது. உலகம் முழுவதும் ஒற்றை நுழைவுத்தேர்வு என்ற தத்துவத்தை நோக்கி நகரும் சூழலில் தமிழகத்தில் மட்டும் ஒரே மாதிரியான படிப்புக்கு இரு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவது அபத்தமாகும்.

முதுநிலை தொழில்படிப்புகள் தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பாவின் ஈகோ தான். தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா அண்மையில் நீக்கப்பட்டார். அதை அவரது ஈகோவால் தாங்கிக் கொள்ள முடியாததால் பொறியியல் கலந்தாய்வு குழுவிலிருந்து விலகி, அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்த முடியாத நிலையை உருவாக்கினார்.

அதன்தொடர்ச்சியாகவே, முதுநிலை தொழில்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை அண்ணா பல்கலை. தனியாக நடத்தும் என்று சுரப்பா அறிவித்திருக்கிறார். ஒருவேளை டான்செட் நுழைவுத்தேர்வுகளை நடத்தும் அதிகாரத்தை அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து தமிழக அரசு பறித்திருந்தாலும் கூட, அத்தேர்வுகளின் அடிப்படையில் தான் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை நடத்தியிருக்க வேண்டும். மாறாக, ஈகோவின் உந்துதலால் மேலும் ஒரு நுழைவுத்தேர்வை அறிவித்து குழப்பங்களை ஏற்படுத்துவதையும், மாணவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது.

கர்நாடகத்தைச் சேர்ந்த சுரப்பாவும் தமிழகத்தின் கல்விச்சூழலும் தெரியவில்லை; தமிழக மாணவர்கள் மீது அவருக்கு அக்கறையும் இல்லை. அவரது கடந்த காலம் குறித்து நன்கு அறிவித்திருந்ததால் தான், அவரை அண்ணா பல்கலை. துணைவேந்தராக நியமிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன். அவரது நியமனத்துக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9&ஆம் தேதி நானே தலைமையேற்று போராட்டத்தை நடத்தினேன். ஆனால், அதை மீறி சுரப்பாவை துணைவேந்தராக ஆளுனர் நியமித்தது தான் தொழில்கல்வி கலந்தாய்வு & நுழைவுத்தேர்வில் நிலவும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.

சுரப்பாவின் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரமும் சீரழிந்து வருகிறது. தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் கடந்த ஆண்டு 4-ஆவது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் நடப்பாண்டில் 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 8-ஆவது இடத்தில் இருந்து 9-ஆவது இடத்திற்கும், ஒட்டுமொத்த தரவரிசையில் 10-ஆவது இடத்திலிருந்து 14-ஆவது இடத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகம் சரிந்திருக்கிறது. பல்கலையை முன்னேற்றுவதற்கு பதிலாக சீரழிப்பதையும், அரசுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு மாணவர்கள் நலனை சீர்குலைப்பதையும் அரசும், ஆளுனரும் சகித்துக் கொள்ளக்கூடாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து சுரப்பாவை நீக்கி விட்டு, சிறந்த கல்வியாளர் ஒருவரை அப்பதவியில் ஆளுனர் அமர்த்த வேண்டும், என தெரிவித்தள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!