Farmers can apply for government subsidies to set up micro-irrigation project

drip-irrigation அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர் பாசன திட்டமானது தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை நீர் வளம் குறைந்து கொண்டே வரும் இந்த சூழலில் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படும்.

எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிறு குறு விவசாயிகளுக்கு (100 சதவீத மானியத்தில்) நுண்ணீர் பாசன அமைப்புகள் ஹெக்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.

சிறு – குறு விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களுக்கு 2.5 ஏக்கர் மற்றும் இதர பயிர்களுக்கு 5 ஏக்கர் வரை இலவசமாக நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக் கொள்ளலாம். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்தியஅரசு இத்திட்டத்தை சிறு – குறு விவசாயிகளுக்கு 35 சதம் முதல் 45 சதம் வரைமட்டுமே மானியம் வழங்கிய போதிலும் தமிழக விவசாயிகளின் நலத்தை காக்கும் வகையில் தமிழக அரசால் 100 சதவீத மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்புஆண்டில் தமிழ் நாட்டில் 46 ஆயிரத்து 99 ஹெக்டர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. நடப்புஆண்டில் பொதுபிரிவு விவசாயிகளுக்கு ரூ.245.56 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கேற்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.69.26 கோடி நிதி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது பெரம்பலூர் மாவட்டத்தில் 3536 ஏக்கர் பரப்பளவில் ரூ.985.50 இலட்சம் மானியத்தில் செயல்படுத்தப்படஉள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் குடும்பஅட்டைநகல், கிராம அடங்கல், கணிணிசிட்டா, நிலவரைபடம், சிறு – குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் 8939002428 (அலைபேசி எண்), மாவட்ட தோட்டக் கலை துறை துணை இயக்குநர் 9442390717 (அலைபேசி எண்)


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!