Farmers protest in Perambalur demanding fulfillment of demands!
பெரம்பலூரில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மடியேந்தி நூதனப் போராட்டம் கடந்த ஜுலை. 5ம் தேதி நடத்தினர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் வேணுகோபால், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும், மாத இறுதியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையும் நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர் மழையால் சாகுபடி செய்து 33 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உர விற்பனை விலையை தமிழக அரசு வேளாண்துறை இணையதளத்தில் வெளியிட்டு வந்ததை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் தள்ளுபடி சலுகையை அமல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மடியேந்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் நீலகண்டன், அரியலூர் மாவட்ட தலைவர் விஸ்வநாதன், திருச்சி மாவட்டச் செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.