Farmers, to sell paddy in a timely manner, online registration: Perambalur Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய இணையவழியின் மூலம் பதிவு செய்து பயனடையலாம் என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் அரசாணை நிலை எண்.60 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை.நாள்.16.07.2021-ல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு 16.12.2021 முதல் இணைய வழி பதிவு முறையின் (Online) மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்தும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.
விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெற்று, இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பெரம்பலூர் துணை மண்டல மேலாளர் அலுவலகத்தை 9443139926 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.