First Generation Entrepreneurship Business Rs. Loan with subsidy up to Rs 30 lakh: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் பொருட்டு, ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) என்ற புதியதொரு சிறப்பு திட்டத்தை குறு, சிறு மற்றம் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் 2012-2013ம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்த உத்தரவிட்டு, மாவட்டத் தொழில் மையங்களின் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களை ஒரு சிறந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கி அவர்களுக்கு ஒரு உற்பத்தி அல்லது சேவை சார்ந்த தொழிலை தொடங்க வங்கி அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலமாக நிதியுதவி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாறு வங்கி அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலமாக நிதியுதவி பெறுபவர்களுக்கு அவர்களது திட்டத்தில் மூலதன செலவினங்களில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30.00 லட்சம் வரை மூலதன மானியமாக வழங்கப்படும். இம்மானியத்தோடு கூடுதலாக 3 சதவிகித பின்முனை வட்டி மானியமும், தகுதி வாய்ந்த இதர மானியங்களும் வழங்கப்பட்டுவருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் – உணவுபதப்படுத்துதல், BHEL சார்ந்த இயந்திர தளவாட உற்பத்தி நிறுவனங்கள், எம்-சான்ட், ப்ளை ஆஸ் பிரிக்ஸ், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஹாலோ பிளாக்ஸ், மெட்டல் ரூபிங்ஸ், கார்ன் பிளாக்ஸ், கால்நடை தீவனம், அட்டை பெட்டிகள், பிளக்ஸ் பிரிண்டிங், மின் மற்றும் மின்னணு பொருட்கள் ஆகிய உற்பத்தி சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில்களான,JCB, ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரம், கட்டிட வேலைக்கான கனரக வாகனங்கள், பிஸினஸ் ப்ராசஸ் அவுட்சோர்சிங் (BPO), மென்பொருள் வடிவமைத்தல், டிஜிட்டல் கலர் லேப், பவர் லாண்டரி, உணவகங்கள், போன்ற தொழில்கள் துவங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நேரடி வியாபாரம், நேரடி விவசாயம், சிவப்பு பிரிவு என மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொழிலகங்கள் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய இனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது. மேலும் சட்டத்திற்கு உட்பட்ட நடைமுறைக்கு சாத்திமான உற்பத்தி, சேவை தொழில்கள் துவங்கலாம்.
மேலும், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தமிழகத்தின் இதர மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களுக்கான தகுதி சிறப்பு பிரிவினருக்கு 21 வயது முதல் 45 வயது வரை, பொது பிரிவினருக்கு 35 வயது வரை. கல்வித் தகுதி பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. தகுதி பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ், பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், இயந்திரங்கள் வாங்குவதாயின் அதற்கான GST எண்ணுடன் விலைப்பட்டியல், துவங்க இருக்கும் தொழிலை பற்றிய திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், பெரம்பலூர் அவர்களை நேரிலோ, தொலைபேசியிலோ (04328-224595, 04328-225580) தொடர்பு கொள்ளலாம் அல்லது www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.