Komari disease vaccine camp: 1,26,050 livestock – livestock department

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் மு.செங்கோட்டையன் விடுத்துள்ள தகவல் :

கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய் ஆகும். இந்நோய் மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் உணவு உட்கொள்ள முடியாமல் மிகவும் மெலிந்துவிடும். மேலும், வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும். பால் கறவை மிகவும் குறையும். கறவைப் பசுக்களில் பால் குடித்து வரும் இளம் கன்றுகள் நோய்தாக்கி இறக்கவும் நேரிடும்.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு கால்நடைகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப் பணிகள், தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால் மற்றும் வாய்நோய் தடுப்புத்திட்டம் 13-வது சுற்றின் கீழ் 01.09.2017 முதல் 21.09.2017 வரை கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் பணிகள் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இம்முகாமில் வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 50 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

இம்முகாம், கால்நடை வளர்ப்பவர்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருந்திருக்கும். மேலும், கால்நடைகளுக்கு ஏதேனும் நோய்த்தொற்று இருப்பது போல் அறிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையினை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள தகவல் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!