Gokulraj murder case: Court adjourned till Nov 19
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். அவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் என்ற இடத்தில் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. கோகுல்ராஜ் தாயார் சித்ரா, பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ் ரயில் நிலைய அலுவலர் கைலாஷ் சந்த் மீனா, கோகுல்ராஜ் சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜ் கல்லூரி தோழி சுவாதி உள்பட மொத்தம் 28 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்டு, இப்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தொடர்ந்து அரசுத்தரப்பு சாட்சிகளான திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் விஜயகுமார், புகைப்பட கலைஞர் செந்தில், அவரது மனைவி மாலதி ஆகிய 3 பேர் பேர் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி கே.ஹெச்.இளவழகன் உத்திரவிட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்த செய்தி, அதில் யுவராஜ் மீதான சந்தேகங்கள் குறித்து ஏராளமான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும், அந்த வகையி்ல் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் விஜயகுமார் அரசுத்தரப்பு சாட்சியமாக சேர்க்கப்பட்டதாகவும், இதுபோல் யுவராஜ்க்கு அறிமுகமானவர்கள் என்ற அடிப்படையி்ல் புகைப்பட கலைஞர் செந்தில், அவரது மனைவி மாலதி ஆகியோர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டதாகவும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் பி.கருணாநிதி தெரிவித்தார்.