Government subsidized agricultural equipment, machinery

agriதமிழ்நாடு முதலமைச்சர் 31.08.2016 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் வேளாண்மையை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்க நடப்பாண்டில், ரூபாய் 31 கோடியே 6 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் கீழ் நெல்நாற்று நடவு செய்யும் இயந்திரம், பவர்டில்லர், சுழற்கலப்பை, குழி தோண்டும் கருவி, விசை களையெடுக்கும் இயந்திரம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம், தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான்கள், மனித தோழமைக் கருவிகளான தென்னை மரம் ஏறும் கருவி, நேரடி நெல் விதைப்புக் கருவி போன்ற கருவிகளும் மற்றும் டிராக்டர் மற்றும் பவர் டில்லர் ஆகியவற்றால் இயக்கப்படும் இதர வேளாண் கருவிகளும், இயந்திரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தில், சிறு,குறு ஆதி திராவிட பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் வரையும் இதர விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் வரையும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண்மைப் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையலாம்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் (வே.பொ) அல்லது உதவி செயற்பொறியாளர் (வே.பொ), அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புல வரைபட நகல், சிறு குறு விவசாயிக்கான சான்று, மற்றும் சாதி சான்று ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்விபரங்கள், வேளாண் பொறியியல் துறையின் முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு மூதுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் அனுமதிக்கடிதம் கிடைக்கப் பெற்றவுடன் தேர்வு செய்த கருவிகள், வேளாண் இயந்திரம் ஆகியவற்றிற்கரிய முழுத் தொகையையும், விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கேட்பு வரைவோலை மூலமாக வழங்க வேண்டும். வேளாண் இயந்திரங்கள், கருவிகளை விவசாயிகள் பெற்ற பின்னர், அதனை வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள் உறுதி செய்து, அதற்குரிய முழு மானியத் தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

விவசாயிகள் வேளாண் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க, இத்திட்டத்திற்கென பெரம்பலூர் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ. 36.71 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளது. எனவே, மானிய விலையில் கருவிகள், இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக வேளாண் பொறியியல் துறையில் பதிவு செய்து, பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையோ, உதவி செயற்பொறியாளர் (வே.பொ) தண்ணீர்பந்தல், எளம்பலூர் அலுவலகத்தையோ, தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார;.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!