Government to accept all bank loans to farmers affected by the storm Gaja: KMDK E.R.Eswaran Request

கஜா புயல் பாதிப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்னும் மீளவில்லை. தமிழக அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். இதே வேகத்தில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் சுமூக நிலைக்கு திரும்ப வர குறைந்தப்பட்சம் இன்னும் ஒரு மாதமாவது ஆகும்.

மின்சார பாதிப்புகளை சரி செய்து மின்சார இணைப்புகளை திரும்ப கொடுக்கின்ற பணி வேகமாக நடக்கிறது என்றாலும் பல இடங்களில் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீரை எடுப்பதற்கு கூட மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பஞ்சாயத்திற்கு ஒரு ஜெனரேட்டர் திட்டமிட்டிருந்தால் இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்டிருக்க முடியும். மின்சார இணைப்புகள் இன்னும் தாமதமாகும் என்பதால் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு ஜெனரேட்டரை வைக்கும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும்.

பொருளாதார பாதிப்புகள் மக்களை நிலைகுலைய செய்திருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் தங்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விகளோடு தடுமாறி போயிருக்கிறார்கள். அரசு அவர்களை கண்டிப்பாக காப்பாற்றி விடும் என்ற செய்தியை நம்பும்படியாக அறிவிக்க வேண்டும். உளவியல் ரீதியான பாதிப்புக்கு நம்பிக்கை தான் மருந்து. பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உருவாக வேண்டுமென்றால் இழப்பீடுகள் கொடுப்பதோடு விவசாயிகள் வாங்கி இருக்கின்ற எல்லா கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும்.

கூட்டுறவு வங்கியாக இருந்தாலும், தேசிய வங்கியாக இருந்தாலும், தனியார் வங்கியாக இருந்தாலும் விவசாயத்திற்காக வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தையே தொலைத்திருக்கும் போது கடனை எப்படி கட்டுவார்கள். மன ரீதியாக அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி பிறக்க வேண்டுமென்றால் தங்கள் கடன் அத்தனையும் அரசு ஏற்றுக்கொண்டது என்ற செய்தி வர வேண்டும்.

கட்டமைப்பு வசதிகளை திரும்ப ஏற்படுத்துகின்ற முயற்சிகளால் மட்டும் அவர்களை வாழ வைத்து விட முடியாது. தாமதப்படுத்தாமல் அரசு அனைத்து கடன்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு வெளியிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!