
Governor’s text is a collection of passive government! Marxist Communist Party – K.Balakrishnan
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை செயலற்ற அரசின் தொகுப்பாகவும், பம்மாத்து மற்றும் பகட்டு வார்த்தைகள் நிறைந்ததாகவும் உள்ளது. நொறுங்கிக் கிடக்கும் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதாக இல்லை.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை அனுதினமும் அதிகரித்துக் கொண்டுள்ளது, ஏற்கெனவே, தமிழகஅரசின் நிதிநிலை அதளபாதாளத்தில் உள்ளது. அரசின் கடன் 3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு தர வேண்டிய தமிழக பங்குத்தொகை சுமார் 8000 கோடி மத்தியஅரசு வழங்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தின் பங்குத்தொகையை வற்புறுத்தி பெறுவதற்கான திராணியற்ற அரசாக இந்த அரசு உள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களைப் புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. பட்டினியும், பசியும், தற்கொலைகளும் தொடர்கதையாகி வருகின்றன. அரசு அறிவித்த நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என்பதோடு, நிவாணரங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை.
தமிழக அரசு கோரிய ரூபாய் 15000 கோடியில் 10 சதவிகிதம் கூட மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை. இத்தகைய மத்திய அரசை கண்டிப்பதற்கு மாறாக, பாராட்டு ஜாலங்கள் ஆளுநர் உரையில் நிறைந்துள்ளது. இந்நிலை வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுடன், குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், ஆணவக்கொலைகள் மற்றும் கொலை, கொள்ளை, குழந்தை கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது, பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்படுகிறது. தங்கள் பிரச்சனைகளுக்கு போராடுகிற மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு போடுவது, தேசத்துரோக வழக்கில் கைது செய்வது போன்ற அடக்குமுறை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கை திறம்பட நிர்வகித்து வருவதாக ஆளுநர் குறிப்பிடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதுநிலை, இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணித் தேர்வில் இந்தி மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு முனையாமல் வேடிக்கை பார்க்கிறது.
காவிரியில் மேகதாட்டுவில் அணை கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழு அனுமதி அளித்ததை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு எதிர்க்கட்சிகள் திரண்டு வலுமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்திய பின்னர் பெயருக்கு சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, ஏதோ மகத்தான சாதனை புரிந்ததைப் போல தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வது சுயவிளம்பரத்திற்கானதாகும்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மிகவும் பின்தங்கி நாடடிலேயே கீழ்நிலையில் உள்ளதோடு, சட்டபபேரவையில் அமைச்சரே 50,000 சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பசப்பு வார்த்தையின் மூலம் தமிழகமக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதே உண்மை. தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்து கொண்டுள்ளது. அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தொகுப்பூதியம், மதிப்பூதியம் மூலம் பல லட்சம் பேர் சுரண்டப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் நியமித்ததன் காரணமாகவே சாத்தூரில் நிறைமாத கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டு தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாதது இளைஞர்களையும், மாணவர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது.
கல்வி தனியார்மயமாகி மக்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் துவக்கப்பள்ளிகள் மூடுவது, சத்துணவு மையங்களை நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரால் மூடுவது, 30க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) மூடுவது போன்றவை கல்வி உரிமையை பறிப்பதாகும்.
அரசின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்துப்பகுதி மக்களும் தங்களது உரிமைகளுக்காக அனுதினமும் போராடி வருகின்றனர். போராடுகிற இம்மக்களது நியாயமான பிரச்சனைகளுக்கு ஆறுதலோ, தீர்வோ ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
ஊழல் முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. சத்துணவு ஆயா முதல் துணை வேந்தர் நியமனம் வரை அனைத்தும் பேரத்தின் அடிப்படையில் நிறைவேறி வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டுள்ளன. குட்கா ஊழல் மற்றும் பல ஊழல் முறைகேடுகளில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், அமைச்சர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் சிக்கி அவர்களின் வீடுகளில் ரெய்டுகளும், இதோடு விசாரணைகளும் நடைபெற்றுள்ளன. அதிமுக அரசு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவைகளை மூடி மறைத்திட பகட்டு மற்றும் பம்மாத்து வார்த்தைகளால் தொகுக்கப்பட்டுள்ளதே ஆளுநர் உரை.
ஏற்கெனவே தமிழக ஆளுநரே பல புகார்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ள நிலையில், இவரது உரை மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தாது. மத்திய பாஜக அரசையும், அதன் எடுபிடியாக உள்ள அதிமுக அரசையும் ஒருசேர வீழ்த்துவதின் மூலமே தமிழக மக்களுககு நம்பிக்கையான எதிர்காலம் அமைந்திடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது, என தெரிவித்துள்ளார்.