Govt officials should work with a spirit of service to the public – Perambalur Collector instructs in grievance meeting!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்து. முதலமைச்சரின் தனிப்பிரிவு, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம் கூட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனும், விரிவாக ஆய்வு நடத்தினார்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், ஒவ்வொருவரின் மனுவின் மீதும் தனிக்கவனம் செலுத்தி கோரிக்கைகளை கேட்டறிந்து, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். பின்னர், அவர் தெரிவித்ததாவது:

வாரந்தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாதத்திற்கு ஒருமுறை மக்கள் தொடர்பு முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, அவ்வப்போது நடைபெறும் அரசு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றார்கள். அரசு அலுவலர்களிடம் மனு அளித்தால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உணர்வுடன், நியாயமான எதிர்பார்ப்புடன் மனு வழங்கும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.

பொதுமக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அரசுத் துறை அலுவலர்கள் பெற்றுள்ளோம். இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி, பொது மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும், என தெரிவித்தார்.

பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 நபருக்கு ரூ.9,300 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள், 1 நபருக்கு ரூ.6,900 மதிப்பீட்டில் தையல் இயந்திரம், 2 நபர்களுக்கு தலா ரூ.7,600 மதிப்பீட்டில் காது கேட்கும் கருவி என 04 பயனாளிகளுக்கு ரூ.31,400 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 222 மனுக்கள் பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் அனைத்து துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!