Gram Sabha Meeting in Perambalur District on Independence Day: Collector’s Announcement!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
ஊராட்சி துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.
மேலும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி, சுகாதாரம் குறித்து, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மான்ய நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம்,
ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறு-கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் – ஊரகம், சிறுபான்மையினர் விவகாரத் துறையின் மூலம் கல்வி உதவித்தொகை மற்றும் உணவுபொருள் வழங்குதல், மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட இலக்கு மக்கள் பட்டியலில் உள்ள ஏழை, மிகவும் ஏழை மற்றும் நலிவுற்றோர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், பிரதான் மந்திரி சுரஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா,
வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, ஊராட்சிகளுக்கான கட்டணங்களை இணையவழி செலுத்துதல், கிராம ஊராட்சியின் தணிக்கை, ஆகிய கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
சுதந்திர தினமான 15.08.2022 அன்று கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும்,
அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத் தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூற வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்)-ஆல் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
75-வது சுதந்திர தினமான 15.08.2022 அன்று கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தரவேண்டுமென தெரிவித்துள்ளார்.
விளம்பரங்கள்: