50 லட்சங்களுக்கு திமுக எம்.எல்.ஏ விற்பனை; பாமக தலைவர் அன்புமணி பேச்சு!
In Perambalur, a DMK MLA sold the kidneys of the poor to foreigners for 40-50 lakhs ;PMK leader Anbumani speaks in Kunnam!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி.பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன்,சமூக நீதி வழக்கறிஞர் பாலு ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்ப்பு நடை பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற உறுதியோடு நான் இங்கு வந்திருக்கிறேன். அதற்கான நேரம் வந்துவிட்டது. இங்கு என் தம்பிகள் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் பெரிய மாநாடு போல கூடியிருக்கிறார்கள். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை உங்களிடையே திமுக ஆட்சியின் அநீதிகளை எடுத்துச் சொல்லி நியாயம் கேட்டு, அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வந்திருக்கிறேன்.
உங்களைப் போன்ற தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வேலை வேண்டும், சமூக நீதி வேண்டும், உங்களை காப்பாற்ற வேண்டும், வருகின்ற தலைமுறையை நல்வழி படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றேன். அரியலூர் மாவட்டத்தில் நான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சுண்ணாம்பு சுரங்கத்தினாலும், சிமெண்ட் ஆலைகளாலும் அந்த மாவட்டம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த விதமான வளர்ச்சித்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அங்கு சோழர் காலத்தில் கொண்டு வரப்பட்ட பாசன திட்டங்களான பல்வேறு ஏரிகள் மிக குறுகிய அளவில் சுருங்கி போய்விட்டது .அதனை மீட்டெடுக்கவில்லை. இதனால் அந்த மாவட்டம் வறட்சியின் கோரப்படியில் சிக்கித் தவிக்கிறது என்றார்.
நான் முதல்வரானால் இந்த சிமெண்ட் ஆலைகள் அனைத்தையும் மூடி விடுவேன், கொள்ளிடம் ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி அவர்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் திமுக அரசு அதனை செய்யவில்லை. மக்களுக்கு கொடுக்கின்ற இலவச திட்டங்களை நிறுத்திவிட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும். அதனை செய்யவில்லை நான் முதல்வராக இருந்திருந்தால் இதைத்தான் செய்வேன்.இலவசங்களை ஒழித்து விடுவேன். நான் ஏதாவது பேசினால் திமுக அரசு நேரடியாமல் நேரடியாக எனக்கு பதில் அளிக்காமல் நமது சமுதாயத்தைச் சார்ந்த அமைச்சர்களை விட்டு அறிக்கை விட செய்கிறார்கள். அந்த அறிக்கை கூட அந்த அமைச்சர்களுக்கு தெரியாமலேயே வருகிறது. உச்ச நீதிமன்றம் வன்னியர் மக்களுக்கு 15%உள் ஒதுக்கீடு தாராளமாக வழங்கலாம் என்று அறிவுறுத்தியும் இதுவரையில் திமுக அரசு வழங்கவில்லை. நம் சமுதாய மக்களின் ஓட்டு மட்டும்தான் அவருக்கு வேண்டும் ஆனால் உங்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள், நமது சமுதாயத்தினர் படித்து விட்டால் ஓட்டு போட மாட்டார்கள் என்பதாலேயே ஸ்டாலின் நம்மளை வஞ்சிக்கிறார். டிசம்பர் மாதம் 7ம் தேதி வன்னியர்களுக்கு குறைந்தபட்சம் 15% உள் ஒதுக்கீடு வேண்டும் என்று சிறை நிரப்பும் போராட்டத்தில் அறிவித்திருக்கிறேன். என் தம்பி தங்கைகளின் வாழ்வாதாரத்திற்காக நான் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.
நமது கூட்டணி ஆட்சி அமைந்தால் இந்த சலுகைகள் எல்லாம் நமக்கு கிடைக்கும் கடந்த 3 தலைமுறையாக கருணாநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் மது கடைகளையும் சாராயக்கடைகளையும் திறந்து வைத்து தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கி வருகிறார்கள். ஸ்டாலின் நிர்வாக திறமையற்றவர் என்ற அன்புமணி, பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் மக்காச்சோளத்திற்கு மதிப்பு கூட்டப்படும் பொருட்கள் தயாரிக்கும் ஆலையோ அல்லது ஆராய்ச்சி நிலையமோ ஏற்படுத்தவில்லை, கொட்டரை நீர்த்தேக்க திட்டம் கிடப்பில் போடப்பட்டு முழுமை பெறவில்லை. இடம் கொடுத்த விவசாயிகளுக்கு பெரம்பலூர் நகரப் பகுதிகளில் வீட்டு மனை பட்டா கொடுத்து அதையும் ரத்து செய்து விட்டார்கள்.
நாமக்கல் திருச்செங்கோடு பகுதி ஏழை எளிய நெசவாளர்களின் அறியாமையையும் அவர்களது கஷ்டத்தையும் சாதகமாக பயன்படுத்தி திமுக எம்எல்ஏ பெரம்பலூரில் சிறுநீரகத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு 40 லட்சம் 50 லட்சத்திற்கு வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இந்த சிறுநீரகங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் திருட்டு என்று சொல்லாமல் முறைகேடு என்று சொல்ல வேண்டும் என்று கூறுகிறார். மேலும், அது குறித்து உரிய விசாரணை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேறு போடுகிறார்கள் இவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று கடிந்து கொண்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அச்சப்படுகிறார்கள். நமது கூட்டணி ஆட்சி வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப அவரவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துரோகங்களை செய்து இருக்கிறார். இந்த ஆட்சியில்சாராயக்கடைகளை மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை புழக்கத்தில் விட்டிருக்கிறது எனவே அனைவரும் உரிமையை மீட்க போராட வேண்டும் என்று பேசினார்.மேலும் இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் டி எம் டி திருமாவளவன்.
முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன்,உலக சாமிதுரை வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன். அரியலூர் -பெரம்பலூர் அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் .மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் பெருமத்தூர் செல்வகுமார். தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் வீரமுத்து.ஒன்றிய செயலாளர்கள் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் என சுமார் 2000-க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் ஒன்றிய செயலாளர் ஓலைப்பாடி பிரபு நன்றி உரை கூறினார்.