பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வடக்கலூர் அகரம் பகுதியில் அக்ரகாரம் ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு உட்பட்ட பாசன விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியரக குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :

vadakkalur-agaram-farmers

அக்ரகாரம் ஏரி 96.85 ஏக்கர் பரப்பளவும், 161.65 ஏக்கர் பாசனப் பரப்பும் கொண்டது. இதில் 3 மதகுகளும், 1 கலிங்கும் உள்ளன. ஏரிக்கு நீர் வரத்து, வடக்கலூர் ஏரியின் கலிங்கிலிருந்து வருகிறது. சின்னாற்றிலிருந்து வரும் வரத்துவாய்க்கால் இப்போது பயன்பாட்டில் இல்லை. இந்த ஏரியின் கலிங்கிலிருந்து வடியும் நீர் சின்னாற்றில் கலக்கிறது. ஆயக்கட்டில் பெரும்பாலும் நெல்சாகுபடியே நடைபெறுகிறது.

தண்ணீர் பற்றாக்குறையின் போது, மின் மோட்டார் மூலமாக, மணிக்கு 50 ரூபாய் வீதம், நீர் இறைக்கிறார்கள்.

அக்ரகாரம் ஏரியில் உள்ள பிரச்னைகள் :

தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வரும் வரத்துவாய்க்கால், பென்னகோணம் பகுதியில் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பிரிவு, ஒகளூருக்கும், இன்னொரு பிரிவு வடக்கலூர் ஏரிக்கும் செல்கிறது. வடக்கலூர் ஏரிக்கு வரும் வாய்க்கால், சுமார் 2 கி.மீ தூரம் உள்ளது. இது, சம்பு, கிணாங்கு, சீமைக்கருவேலி ஆகியவற்றால் மூடப்பட்டுள்ளது. வாய்க்கால், சில இடங்களில் மேடு தட்டியும் உள்ளது. சென்ற ஆண்டு, கீழக்குடிக்காடு பகுதியில், வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டது. இந்தக் காரணங்களால், நீர் வீணாகியும், ஏரிக்கு நீர் வரத்து குறைந்தும் பிரச்னை ஏற்படுகிறது.

அக்ரகாரம் ஏரிக்கு, சின்னாற்றிலிருந்தும் நீர் வரும் வகையில் வரத்துவாய்கல் கால் ஒன்றுள்ளது. இந்த வாய்க்கால் மேடு தட்டியும், குறுக்கே பாதைகள் உருவாக்கப்பட்டும், தோற்றுவாயில் சீமைக் கருவேலி மற்றும் புதர்ச்செடிகள் மண்டியும், வாய்க்கால் பலகாலமாக பயன்பாட்டில் இல்லை.

மதகுகள் 1 (ஆலமரத்து மதகு) & 2ல் தண்ணீரைக் கட்டுப்படுத்தும் கருவியில் பிரச்னை உள்ளது. ஏற்றி, இறக்கும் ஷட்டர் பொருந்துவதற்கான இரும்புச் சட்டம் சரியில்லை. இதனால் ஷட்டரை ஏற்றி, இறக்க முடியவில்லை. தண்ணீர் வீணாகிறது. கடந்த வடகிழக்குப் பருவ மழைக்குப் பின், கிட்டத்தட்ட 40 நாட்கள் மதகுகள் (1&2) மூடப்படாமல் தண்ணீர் வீணாகியுள்ளது.

மதகுகள் 1 & 2-ன் பாசன வாய்க்கால்கள் உடைந்துள்ளது. மதகு 1-யை ஒட்டியுள்ள கரையில் மண்சரிவு இருப்பதால், இந்தப் பாசன வாய்க்காலின் வட, தென் புறம் சிமெண்ட் கட்டமைப்புகள் உடைந்துள்ளன.

மதகு 3, உட்பக்கம் அடைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லை. முன்பு ஒருவரின் நிலத்திற்காகப் போடப்பட்ட மோட்டார் ஒன்றின் மூலம் பாசனம் நடைபெறுகிறது

கலிங்கு சரியான முறையிலுள்ளது. கலிங்கு பகுதியில், நெய்வேலி காட்டாமணக்குச் செடிகள் அதிகமுள்ளன.

முன்பு, கலிங்கின் மேற்குப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, கலிங்கை ஒட்டியுள்ள சுவர் விரிசல் கண்டது. அது, இப்போது இடியும் நிலையில் உள்ளது.

நீர் நிர்வாகம்

கடந்த 30 ஆண்டுகளாக, ஏரியின் பாசன வாய்க்கால்களின் நீர் நிர்வாகத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வீ. கோவிந்தன் , எம். பெரியசாமி ஆகிய இருவரும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக, புகழேந்தி என்பவரும், அவரது தந்தை. ராமசாமி என்பவரும் நிர்வாகம் செய்கின்றனர்.

பராமரிப்புப் பணிகள் :

2008ல் நீர்வள- நில வளத்திட்டம் மூலம் உலக வங்கி உதவியுடன், கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, இந்த ஏரியை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் தூய்மை செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள்

பென்னகோணம் பகுதியிலிருந்து வடக்கலூருக்கு வரும் வரத்துவாய்க்கால், 2 கி.மீ தூரத்திற்கும் முழுமையாகத் தூர் வாரப்பட்டு, சீரமைக்கப் படவேண்டும்.

சின்னாற்றிலிருந்து, அக்ரகாரம் ஏரிக்கு வரும் வரத்துவாய்க்கால் முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும்.

மதகுகள் 1 & 2, ஷட்டர்கள்- இரும்புச் சட்டங்களுடன் சரிசெய்யப்பட வேண்டும்.

மதகுகள் 1 & 2 -யை ஒட்டியுள்ள பாசன வாய்க்கால்கள் முழுமையாக சரிசெய்யப்பட வேண்டும்.

மதகு-1 யை ஒட்டியுள்ள கரையில், 3 அடி உயரத்திற்கு சிமெண்ட் சுவர்கள் எழுப்பப்பட்டு, மண்சரிவு தடுக்கப்பட்டு, பாசன வாய்க்கால்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கலிங்கின் மேற்குப் பகுதியில், கலிங்கை ஒடியுள்ள அணைப்புச் சுவரில் இடிபாடு உள்ளதால், அதன் உட்பகுதியில், சுவரையொட்டி, சுமார் 15 அடி உயரத்துக்கும், 20 மீ நீளத்திற்கும், மண் அடித்து, கரை எழுப்பி, சுவர் உடையாமல் பாதுகாக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவ மழைக்கு இன்னும் சில மாதங்களேயுள்ள நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து, பராமரிப்புப் பணிகளை முடித்து, எங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டுமென தங்களைக் கேட்டுக் கொள்கிறோம். தேவையான ஒத்துழைப்பை அரசுக்கு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம், என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!