In Perambalur District, Farmer-Officer Contact Scheme on behalf of the Government: Perambalur Collector Information

வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் உழவர் – அலுவலர் தொடர்புத் திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் நவீன வேளாண் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தவும், வேளாண் சம்பந்தமான தகவல்களை பரிமாறவும் “உழவர் – அலுவலர் தொடர்புத் திட்டம்” பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேளாண் அதிகாரிகள் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளை சந்திக்கும் பயண திட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்து, அவர்களுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டம் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற விவசாயிகள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கும் மற்ற விவசாயிகளுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4 வட்டாரங்களிலும் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களின் தலைமையில் வேளாண் விஞ்ஞானி, வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு “வட்டார வேளாண் விரிவாக்க குழு” ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று தோட்டக்கலை துறையிலும் “வட்டார தோட்டக்கலை விரிவாக்க குழு” அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வட்டார உதவி இயக்குநர்களின் கீழ் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் விரிவாக்க பணிகளை வாரத்தில் 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கிராமங்களில் வயல் ஆய்வு மேற்கொண்டு பயிர் சாகுபடி தொடர்பான பிரச்சனைகளுக்கு உரிய பரிந்துரைகள் வழங்குவார்கள். மேலும், நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, வானிலை முன்னறிவிப்பு குறித்து விவசாயிகளுக்கு தெரிவிப்பார்கள்.

இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் 9787061637 என்ற கைபேசி எண்ணிலும், பெரம்பலூர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை 9786377886 என்ற கைபேசி எண்ணிலும், ஆலத்தூர் வேளாண்மை உதவி இயக்குநரை 9894748739 என்ற கைபேசி எண்ணிலும், ஆலத்தூர் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநரை 9715167612 என்ற கைபேசி எண்ணிலும், வேப்பூர் வேளாண்மை உதவி இயக்குநரை 9500936038 என்ற கைபேசி எண்ணிலும், வேப்பூர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை 9500567619 என்ற கைபேசி எண்ணிலும், வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குநரை 8056782946 என்ற கைபேசி எண்ணிலும், வேப்பந்தட்டடை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை 9585196906 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.

எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் தங்களது விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்று, வேளாண் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் மானிய திட்டங்கள் குறித்த விளக்கங்களும் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!