In Perambalur If the labor shortage challenge to work with district farmers are shifting Casuarina cultivation.
ஆரம்ப காலங்களில் தரிசு, களர் மற்றும் உவர் நிலங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த சவுக்கு சாகுபடி, ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது வறட்சி மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் விளை நிலங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில், மக்காச்சோளம், கம்பு, நெல், எள், உளுந்து, ஆமணக்கு, நிலக்கடலை, கரும்பு, கருணை, மஞ்சள், பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களில், தற்போது வறட்சியை தாங்க கூடியதும், சாகுபடிக்கு குறைந்த செலவும், குறைவான பணி ஆட்களும், குறைந்த தண்ணீரும் போதும் என்பதால் சவுக்கு சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மற்ற பயிர்களை போல் அல்லாமல் சவுக்கு மரம் வளர்ப்பின் போது களை எடுத்தல், உரமிடுதல், ஏர் ஓட்டுதல், பார் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறைவதுடன், முதலாண்டில் பாசிப்பயிறு, உளுந்து, நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக செய்து கூடுதலாக வருமானம் பெறலாம் என்றும் உழவர்கள் தெரிவிக்கின்றனர்.
காகித ஆலைகளில் மரக்கூழ் தேவைக்காக சவுக்கு மரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. காகித ஆலைகளில் ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.650 வீதம் வழங்கப்படுகிறது. அடி மரம் டன் ஒன்றுக்கு 3500 ரூபாயும், நுனி மரம் டன் ஒன்றுக்கு ரூ.2500 வரை கொள்முதல் செய்ய்ப்படுகிறது. இது மட்டுமல்லாமல், வனத்துறை சார்பில் ஊக்கத் தொகையாக மரங்கள் வளர்க்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 90 சதவீதமும், இரண்டு ஆண்டுகள் கழித்து , கன்று வளர்ந்த பின்னர் மீதமுள்ள 10 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
கட்டுமானம், கூரைவேய்தல், பந்தல் அமைத்தல், விளம்பர பதாகைகள் வைப்பதற்கும் பெருமளவில் சவுக்கு மரங்களே பயன்படுத்தப்படுவதால், அதிக தேவையும், நியாயமான விலையும் கிடைக்கும் சவுக்கு மர வளர்ப்பில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுநாள் வரை சாகுபடி செய்த தானிய வகைகள் மற்றும் இதர தீவனப் பயிர்களை விட்டு புதிய மாற்றுமுறை விவசாயத்திற்கு உழவர்கள் தயராகிவிட்டனர்.