பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. இதனால் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் வீழ்ந்தன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. மதிய வேளையில் ரோடுகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத வகையில் அனல்காற்று வீசியது.
இந்த நிலையில் இன்று காலையிலும் வழக்கம் போல வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பெரம்பலூர் வட்டார பகுதியில் மதியம் சுமார் 3 மணி அளவில் வெயில் குறைந்து கருமையான மேகங்கள் திரண்டன. அதனை தொடர்ந்து பலத்த சூறைக்காற்றும் வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
செங்குணம் கவுள்பாளையம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடித்து ஓடியது.
பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கின. பலத்த சூறைக்காற்றில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள் சாலையோரம் வைத்திருந்த பதாகைகள் முறிந்து விழுந்தது. 11 மி.மீ அளவு மழை பதிவாகி இருந்தது. இதே போன்று நேற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் பலப் பகுதிகளிலும் பெய்தது. உழவர்கள் வைகாசி பட்டத்திற்கு வெங்காயம், உளுந்து. நிலககடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் சாகுபடியில் தீவிரவாக ஈடுபட்டுள்ளனர்.