Industrial Park in Padalur: Perambalur Collector, Consultative meeting with investors and entrepreneurs
ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பாக, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு கழகம் செயல் இயக்குநர் அணிஸ் சேகர் முன்னிலையில் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.
தொழிற்பூங்கா அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு உட்கட்டமைப்பிற்கான செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இதில் எது குறைவோ அதனை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கபட்டுள்ளது.
அதனடிப்படையில், விவசாயத் தொழிலை முதன்மையாக கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக புதிய தொழில் நிறுவனங்கள் இந்த ஒருங்கிணைந்த தொழிற்பூங்காவில் அமைய உள்ளதால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமையும். எனவே முதலீட்டார்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களை அமைத்து பயனடைந்து கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ. சி.ராஜேந்திரன், சார் ஆட்சியர் பத்மஜா, தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு கழக திட்ட அலுவலர்கள், தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டு கழகம், கைத்தறி, மாவட்ட தொழில் மையம் சார்ந்த பணியாளர்கள், மற்றும் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.