Inspection of private school vehicles on behalf of the Perambalur Regional Transport Department today

அரசு விதிமுறைகளுக்குள் (பள்ளி பேருந்து வாகன சிறப்பு விதிகள் 2012ம் ஆண்டுப்படி) உட்பட்டு இயக்குவதற்கு தகுதியற்ற தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கு முதற் கட்ட தணிக்கை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் விசுவநாதன், தலைமையில் இன்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான வாகனங்களில் அவசரகால வெளியேறும் வழி, பள்ளி மாணவ, மாணவிகள் பாடப்புத்தக பைகளை வைக்க தனி வசதி, எளிதில் பேருந்தில் ஏறி இறங்கும் வகையில் படிக்கட்டின் உயரம், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 370 பள்ளி வாகனங்களில் இன்று முதற்கட்டமாக சுமார் 250 வாகனங்கள் இன்று தணிக்கை செய்யப்பபட உள்ளன. மறு கட்ட தணிக்கை மற்ற வாகனங்களுக்கும் நடைபெறும். குறைபாடு உள்ள வாகனங்கள் தகுதிச்சான்று நீக்கம் செய்யப்பட்டு, குறைகள் சரி செய்தபின் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) சி.கே. ஜெயதேவராஜ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் கே.செல்வராஜ், உள்பட போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும், இந்த ஆய்வுக்குழு உறுப்பினர்களாக உள்ள வருவாய்த்துறை, ஏடிஎஸ்பி ரவீந்தரன் உள்பட காவல் துறை, போக்குவரத்து துறையினர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்கள், உதவியாளர்கள், பள்ளி மேலாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை சார்பில் விபத்தில் சிக்கியவர்கள் மீட்பதும், உரிய முதலுதவி செய்வது மற்றும் விபத்தால் வாகனத்தில் தீ ஏற்பட்டால் அணைப்பது உள்ளிட்ட பயிற்சிகளை தீயணைப்பு அலுவலர் பால்ராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பயிற்சி அளித்தனர்.