Invitation to apply for admission under the Free and Right to Education Act of Children

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு இத்திட்டத்தில் LKG அல்லது ஆரம்ப வகுப்பில் மொத்தமுள்ள சேர்க்கைக்கான 25 சதவீத இடங்களுக்கு இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் 22.04.2019 முதல் 18.05.2019 வரை இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலகம் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலகம் பெரம்பலூர் மற்றும் வேப்பூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் (SSA) ஆகிய மையங்களில் எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் சேர்க்க விரும்பும் பள்ளிகளில் விண்ணப்பங்களைப் பெற்றால் அதனை பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தனியார் சுயநிதி பள்ளியிலும் தகவல் பலகையில் அந்த பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் குறித்து அறிவிப்பு இடம் பெற்றிருக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்பபடும்.

மேற்காணும், வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இணையதளவழியில் விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கானச் சான்று, மாற்றுத் திறனாளிச் சான்று, மூன்றாம் பாலினத்தவருக்கான சான்று, ஆதரவற்றோர் சான்று போன்ற சான்றுகளை விண்ணப்பிக்கும்போது கொண்டு வரவேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!