கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

schedule
2022-05-23 | 12:56h
update
2022-05-23 | 13:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kalaignar’s All Village Integrated Agricultural Development Project: Launched by Tamil Nadu Chief Minister MK Stalin via video conference.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலிக் காட்சி வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலுார் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று, கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் 10,267 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பெரம்பலுார் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட செயலாளளர் குன்னம்.சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலத்தூர் வட்டாரத்தில் கீழமாத்தூர், அல்லிநகரம், இரூர், காரை, நக்கசேலம் மற்றும் நாரணமங்கலம் கிராமங்களிலும், பெரம்பலூர் வட்டாரத்தில் எளம்பலூர், எசனை மற்றும் வடக்குமாதவி கிராமங்களிலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் மலையாளப்பட்டி, அன்னமங்கலம், வி.களத்தூர் மற்றும் பிரம்மதேசம் கிராமங்களிலும், வேப்பூர் வட்டாரத்தில் சிறுமத்தூர், அகரம்சீகூர், எழுமூர், கீழப்புலியூர், கிழுமத்தூர், ஓலைப்பாடி, பரவாய் ஆகிய 20 கிராம ஊராட்சிகளில் உழவர் நலத்துறை மூலம் 6.030 பயனாளிகளுக்கு ரூ.35.43- இலட்சமும், தோட்டக்கலை-மலைப்பயிர் துறை மூலம் 4.540 பயனாளிகளுக்கு ரூ.14.62 இலட்சமும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ.16.57 இலட்சமும் என மொத்தம் ரூ.66.62 லட்சம் மதிப்பீட்டில் 10,570 விவசாய பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

Advertisement

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்குதல், தொழில்முனைவோர் ஆக்குவதற்கான கடனுதவி, 100 சதவீதம் மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்குதல், 75 சதவீத மானியத்தில் வரப்பு பயிராக உளுந்து, துவரை, பச்சைப்பயறு மற்றும் தட்டைப்பயறு விதைகள் வழங்குதல், வேளாண் உபகரணங்களாக கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் வழங்குதல், தோட்டக்கலைத்துறையின் மூலம் வீட்டுத்தோட்டம் அமைக்க 8 வகையான காய்கறி விதைகள், மண்புழு உரம் வழங்குதல், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய ஊக்கத்தொகை வழங்குதல், பழமரக்கன்றுகள் வழங்குதல், பஞ்சகாவியா போன்ற இயற்கை உரம் தயாரிக்க பயன்படும் வகையில் 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம் வழங்குதல், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் நீர்நிலைகளை துார்வார நிதியுதவி வழங்குதல் போன்ற பல திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அதனடிப்படையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓலைப்பாடி ஊராட்சியை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு வேளாண்மை – உழவர்நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகளின் சார்பில் ரூ.5.10 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வேளாண் உபகரணங்களையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்வில் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, மாவட்ட பஞ்சயாத்து துணை சேர்மன் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கருணாநிதி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 15:06:47
Privacy-Data & cookie usage: