Keelakarai Mohammed Sathak Polytechnic Campus Interview: 435 Selection: Train to Japan for Jobs

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாகத்தேர்வு முகாமில் பல்வேறு நிறுவனங்களில் சேர்வதற்கு கல்லுாரியிலிருந்து 435 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. கீழக்கரையில் ஜப்பான் நிறுவனம் தொடங்க 75 ஏக்கர் நிலம் வழங்க முகம்மது சதக் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள பல்வேறு பெரிய நிறுவனங்களில் சேர்வதற்கான ஆள்சேர்ப்பு வளாக தேர்வு நடைபெற்று நுாற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்வு பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் இந்தாண்டுக்கான வளாகத்தேர்வு முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் உள்ள கலை அரங்கத்தில் நடந்தது. இந்த வளாகத்தேர்வில் எச்சிஎல், ஜப்பான் நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்களுக்கு பணியில் சேர்வதற்கான நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் ஜப்பான் நாட்டை சேர்ந்த கே.சி.கன்சல்டன்ட் நிறுவனத்தின் சீனியர் ஜப்பான் மொழி ஆலோசகர் ஹிதே ஹரு ஹயோதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜப்பான் நாட்டில் பணிபுரிய மாணவர்கள் எப்படி தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

வளாகத்தேர்வு முகாமில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் 435 பேர் நேரடியாக நேர்முகத்தேர்வின் முலம் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை அரங்கத்திலேயே வழங்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்து பணிநியமன ஆணையை பெருமையுடன் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து வாங்கினர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மேடையில் கல்லுாரி நிர்வாகத்திற்கும், முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மனதார தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் கல்லுாரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.யுசப் தலைமை வகித்து பேசியபோது, வேலையில் சேர்வது பெரிய விஷயமல்ல. சேர்ந்த வேலையை தக்க வைக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு நிறுவனம் என அடிக்கடி ஜம்ப் செய்து கொண்டே இருக்கக்கக்ஷடாது. ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினால் பதவி உயர்வு கிடைக்கும். சாதாரண நிலையில் பணியில் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றுவதன் முலம் நிறுவனத்தின் மேலாளர், பொது மேலாளர் என பதவி உயர்வு பெற முடியும். இரண்டாவது, மாணவர்கள் எந்த சுழலிலும் தங்கள் பெற்றோரை மறந்துவிடக்கக்ஷடாது. நீங்கள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் உங்கள் பெற்றோரை மதித்து மறக்காமல் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும். முன்றாவது, தர்மம் அதாவது உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். இந்த முன்றையும் பின்பற்றினால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடுவீர்கள், என பேசினார்.

ஜப்பான் நாட்டு கே.சி.கன்சல்டன்ட் நிறுவனத்தின் ஜப்பான் மொழி சீனியர் ஆலோசகர் ஹிதே ஹருஹயோதா பேசும்போது, ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை குறைந்துவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் வேலைக்கு அதிகமான நபர்கள் தேவைப்படுகின்றனர். ஜப்பான் நாட்டில் பணிபுரிய கண்டிப்பாக ஜப்பான் மொழி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஜப்பான் மொழியும், தமிழ் மொழியும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஜப்பான் மொழி கற்றுக்கொள்வது எளிது. 5 லெவல் உள்ளது. இதற்காக சென்னையில் ஜப்பான் மொழி கற்றுத்தருகிறோம். இதில் முதல் இரு லெவல் தேர்ச்சி பெற்ற உடனேயே ஜப்பானில் வேலைக்கு சென்றுவிடலாம். எங்களது நிறுவனம் மூலம் ஜப்பான் மொழி கற்று நுாற்றுகணக்கானோர் தமிழகத்திலிருந்து ஜப்பான் நாட்டிற்கு சென்று பணியில் சேர்ந்துள்ளனர். விரைவில் கீழக்கரை முகம்மது சதக் கல்லுாரி வளாகத்தில் மொழி கலாச்சார மையம் தொடங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி கீழக்கரையில் ஜப்பான் நாட்டு தொழில் நிறுவனம் அமைவதற்கு முகம்மது சதக் அறக்கட்டளை சார்பில் 75 ஏக்கர் நிலம் தருவதாக தெரிவித்துள்ளனர். இங்கு விரைவில் ஜப்பான் நிறுவனம் வர உள்ளது. நிறுவனம் வரும் பட்சத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்கள் பயனடைவர், இவ்வாறு அவர் பேசினார்.

எச்சிஎல் நிறுவன மேலாளர் கருணாநிதி, முகம்மது சதக் கல்லுாரிகளின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் மணிவண்ணன், முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹமீது இப்ராகிம், முகம்மது சதக் பொறியியல் கல்லுாரி முதல்வர் அப்பாஸ் முகைதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!