கோகுல்ராஜ் கொலை வழக்கு: கல்லுாரி தோழி தாயார் சாட்சியம் : விசாரணை ஒத்திவைப்பு

schedule
2018-09-18 | 17:40h
update
2018-09-18 | 18:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gokulraj murder case: College girlfriend’s mother testified: Oct., 1-on trial adjourned

File Copy


நாமக்கல் : கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது கல்லூரி தோழியின் தாயார், நண்பர் உள்பட 6 பேர் நேற்று நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்திரவிட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த திருச்செங்கோடு போலீஸார், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உள்பட 17 பேரை கைது செய்தனர்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. கோகுல்ராஜ் தாய் சித்ரா, பள்ளிபாளையம் காவிரி ஆர்எஸ் ரயில் நிலைய அலுவலர் கைலாஷ் சந்த் மீனா, கோகுல்ராஜ் சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜ் கல்லுாரி தோழி சுவாதி ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இவர்களிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார்.

இதில் சுவாதி, வழக்கு விசாரணையின்போது தனக்கு கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது என, சாட்சியம் அளித்தார். இச்சூழலில் நேற்று சுவாதியின் தாயார் செல்வி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்விகளை கேட்டு பதிலை பெற்றார்.

மேலும், திருச்செங்கோடு மலைக்கோயிலில் இருந்து கோகுல்ராஜ், அவரது கல்லுாரி தோழி சுவாதி ஆகிய இருவரும் சிலரால் அழைத்து வரப்படும் சிசிடிவி பதிவு காட்சிகள் செல்விக்கு காண்பிக்கப்பட்டது. அப்போது, அதில் வருவோர் ஆண், பெண் எனத், தெரிகிறது. எனினும், அவர்கள் யார் என்றே தெரியாது என்றார். தொடர்ந்து மதிய இடைவேளைக்கு பின் மீண்டும் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

கோகுல்ராஜ் நண்பர் கார்த்திக் ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதுபோல், பள்ளிபாளையம் ரயில்வே துணை மேலாளர் கதிரேசன், ரயில் ஓட்டுநர்கள் வடிவேல், முனுசாமி, கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் படித்த தனியார் கல்லுாரி முதல்வர் தியாகராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்திரவிட்டார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 14:17:42
Privacy-Data & cookie usage: