Kunnam: IJK Founder Parivendhar Canvasses for Votes at Mosques in Labbaikudikadu!
குன்னம் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். லப்பைக்குடிக்காட்டில் சுமார் 9400 வாக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் இன்று பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தர்களிடமும் இன்று தொழுகை முடிந்த இஸ்லாமியர்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பெருமதிப்பிற்குரிய நண்பர், காலமெல்லாம் அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று யார் கேட்டார்களோ அவர் சொல்லுவார். அதாவது இவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மகிழ்வார்கள்; கேட்காதவர்கள் ‘தவறிவிட்டோமே’ என்று கவலைப்படுவார்கள். இவருடைய பேச்சையும் உச்சரிப்பையும் கேட்பதற்கு நான் திரும்பத் திரும்ப இங்கே வர வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.
அதோட மட்டுமல்லாமல், நான் ஜமால் முகமது கல்லூரியில் படிக்கிற போது என்னுடைய வகுப்பு நண்பர் சம்சுதீன். இவர் பெயரும் சம்சுதீன் தான். அதனால மிக அற்புதமான ஒரு சொற்பிரயோகம், இனிமையான உச்சரிப்பு – இது எல்லாத்துக்கும் வராது. இதை கேட்கறதுக்கே நான் அடிக்கடி வரணும்னு எனக்கு ஆசையா இருக்கு. அத்தகைய பெருமைக்குரிய என் இனிய நண்பர் சம்சுதீன் அவர்களோடு, ஜமால் முகமது கல்லூரி நண்பர்களைப் பார்க்கிற வாய்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள், அதற்காக நன்றி.
உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்… ‘அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதலை விட, ஆலயம் பதினாயிரம் நாட்டுதலை விட, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம்’.
மனுஷன் ஒரு கோடி, ஒரு புண்ணியத்துக்கே அலையுறான். ‘கோடி புண்ணியம்’! அந்த கோடி புண்ணியத்தைப் பெறுகிற வாய்ப்பை ஆண்டவன் எனக்கு கொடுத்திருக்கிறார். அதை இந்த பள்ளிவாசலில், இந்த இடத்தில் பேசுவதற்கு எனக்கு பெருமையாக இருக்கிறது. என் அன்பு நண்பர் சம்சுதீன் முன்னிலையில் பேசுவதற்குப் பெருமையாக இருக்கிறது.
நான் அடிப்படையில் ஒரு கல்வியாளன். 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்வித்துறையில் இருக்கிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். குன்னமும் பெரம்பலூரும் அவ்வளவு தூரம் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் அங்கே இருந்தபோது என்னால் என்ன முடியுமோ, யாராரால் என்ன முடியுமோ அதைத்தான் சொல்ல முடியும். நான் வந்து ‘புரட்டிப் போட்டுருவேன்’ என்று சொல்ல முடியாது.
எனக்கு ஐந்து பல்கலைக்கழகங்களும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் இந்தியா அளவில் படிக்கிற இன்ஸ்டிடியூஷன்களும் (SRM) இருக்கின்றன. அதனால நான் எங்க போனாலும் அங்க இருக்கிற மக்களுக்கு வசதி உள்ளவர்களோ அல்லது அற்றவர்களோ, ஏதாவது செய்ய முடியும் கல்வியின் மூலமாக என்றுதான் என் சிந்தனை ஓடும். அந்த வகையிலே கடந்த முறை நாடாளுமன்றத்தில் 1500 மாணவர்களைப் படிக்க வைத்தேன். அதேபோல குன்னமும் பெரம்பலூரும் ரொம்ப தூரம் இல்லை.
ஆக, இந்த குன்னம் தொகுதிக்கு நம் கட்சியினுடைய வேட்பாளர் அன்பு சகோதரி சரண்யா அன்பழகனை வெற்றி பெறச் செய்தால், உங்களுக்கு 100 சீட் (இலவசக் கல்வி இடங்கள்) குன்னம் தொகுதிக்குக் கொடுப்பதாக நான் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதில் குறிப்பாக, இந்த லப்பைக்குடிக்காட்டிற்கு 10 சீட் தனிப்பட்ட முறையில் – அதாவது உள் ஒதுக்கீடு என்பார்கள் இல்லையா – குன்னத்திற்கு 100, அதில் நம்ம லப்பைக்குடிக்காட்டிற்கு 10. அந்த பத்தும் உங்களுடைய அன்பு நண்பரும் வேட்பாளரும் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களுக்கு எஸ்.ஆர்.எம் (SRM) பல்கலைக்கழகத்தில் வாய்ப்புக் கொடுத்து, பட்டதாரியாக்கி, வேலைவாய்ப்பையும் பெற்றுத் தரப்படும் என்று இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
ஆனால் இப்ப என்ன பார்த்தீங்கன்னா, ‘இலவசம்’ என்று சொல்லி கொண்டு வர முயற்சிப்பார்கள். தேர்தலுக்கு முன்னாடி மாத்திரம் வந்து 500 கொடுத்தால், 1000 கொடுத்தால், 2000 கொடுத்தால்… அதெல்லாம் உங்கள் வரிப்பணம், ஊழல் பணம். அதை கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்காங்க. கல்வி என்பது காலத்துக்கும் உங்கள் வீட்டை விளக்கேற்றி வைத்த மாதிரி. அந்த வகையிலே இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு…
உங்களுக்கு ஆயிரம் சந்தேகங்கள் இருக்கலாம். ‘மந்திரி வருவார், இது யாரு வருவார்கள், யாருக்கு வாக்களிப்பது?’ என்ற ஐயப்பாடு இருக்கலாம். இருந்தாலும் தமிழுக்கு பெயர் போன இஸ்லாமிய சகோதரர்கள் மூலமாக இதைச் சொல்லுகிறேன். இன்னைக்கு இந்தியாவில் தமிழ் வாழ்கிறது என்றால், தமிழ்நாட்டில் தமிழ் வாழ்கிறது என்றால், அது இஸ்லாமிய சகோதரர்களால் மட்டும்தான் முடியும். அப்படி ஒரு அற்புதமான உச்சரிப்பு. நான் ஜமாலில் படிக்கும்போது கவிதை எழுதக் கற்றுக்கொண்டேன். அந்த மாதிரி இந்தச் சமுதாயத்திற்கு…”.
இந்த வேட்பாளரை வருகிற 23-ஆம் தேதி வாக்களித்து பெருவெற்றி பெறச் செய்ய வேண்டும்.” “உங்களது சூழ்நிலை எனக்குப் புரிகிறது, நண்பரே. உங்களைப் போலப் பலர் வருவார்கள், இந்த நேரத்தில் வருவார்கள், அவசரமாக வருவார்கள்.” “அவர்களோடு என்னைப் பத்தோடு பதினொன்றாக எண்ணிவிட வேண்டாம். நான் எப்போதும் உங்களுடன் இருப்பவன்.” “எனவே நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிற அத்தனை வாக்குகளும் இந்தப் பெண்மணிக்கே போக வேண்டும்.” “ஆண்கள் பெண்களுக்குச் சமம் என்று வாயால் சொன்னால் மட்டும் போதாது.” “எங்களுக்குக் கிடைத்த இரண்டு இடங்களில் ஒன்று பெண், இன்னொன்று ஆண்.”
“இங்கே நம்புக்கூடிக்கார்டு யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, உங்கள் வாக்குகள் முழுமையாகப் போட்டு யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.” “இங்கு 10,000 வாக்குகள் இருப்பதாகவும், அதில் 9,400 வாக்குகள் பெற்றால் வெற்றி வாய்ப்பு உறுதி என்றும் கூறப்படுகிறது.” “உங்களை யார் மனதைக் கலைக்க வந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, என் அன்பு நண்பர் சாம்சன் அவர்கள் உங்களை வழிநடத்துவார்.” “அத்தனை வாக்குகளும் ஐ.ஜே.கே வேட்பாளருக்கும், எங்களது சின்னமான இரட்டை இலைக்கும் அளித்து இந்தப் பெண்மணியை (வேட்பாளர் சரண்யா) வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என பேசினார். லப்பைகுடிகாடு கிழக்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சம்சுதீன், லப்பைகுடிகாடு மேற்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பிச்சை முகமது உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள், முன்ளாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் எம்.பி சந்திரகாசி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, ஏ.கே. ராஜேந்திரன், ஐஜேகே மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, லப்பைக்குடிக்காடு பேரூர் பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.