என்னைத் தன் தோளில் தாங்கிய மனிதர்தான் குன்னம் ராஜேந்திரன்: ஆ.இராசா எம்.பி பேச்சு!

schedule
2026-10-16 | 11:33h
update
2026-10-16 | 12:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam Rajendran is the man who carried me on his shoulders: A.RAJA MP’s speech!

பெரம்பலூர் திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகியாக இருந்த குன்னம் சி. ராஜேந்திரன் படத்திறப்பு விழா, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி தலைமையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு எம்.எல்.ஏ நேற்று திறந்து வைத்தார். பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வரவேற்றார். குன்னம் ராஜேந்திரனின் குடும்பத்தினரான ரமேஷ், செந்தில்நாதன், வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி பேசியதாவது:

குன்னம் ராஜேந்திரனின் சிறப்பையும், அன்பையும் பெற்றிருந்த அண்ணியார் உள்ளிட்ட குன்னம் ராஜேந்திரனுடைய குடும்பத்தைச் சார்ந்த நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியலில் ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்து, எந்த பெரிய பின்புலமும் இல்லாமல் பெரிய பட்டப்படிப்போ அல்லது பணபலமோ எந்த பலமும் இல்லாமல் ஒருவர் அரசியலிலே ஐந்து முறை, ஆறு முறை ஒன்றியக் கழகத்தினுடைய செயலாளராக, அதுவும் இப்போ துரைசாமி சொன்ன மாதிரி எல்லாம் நாமினேட் பண்றோமே அந்த மாதிரி இல்லாம ஓட்டுத் தூக்கி, அதுக்கு அடிதடி நடந்து, அப்படி ஜனநாயக ரீதியாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து முறை ஒன்றியக் கழகத்தினுடைய செயலாளராக, மாவட்டக் கழகத்தினுடைய துணைச் செயலாளராக, பிறகு மாவட்டக் கழகத்தினுடைய செயலாளராக, அரசுப் பொறுப்பில் என்று சொன்னால் ஒன்றியத் துணைப் பெருந்தலைவராக, அதற்குப் பிறகு மாவட்ட ஊரக வளர்ச்சி மன்றத் தலைவராக இப்படி ஆட்சியிலேயும் கட்சியிலேயும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து, எனக்கு முன்னாலே எல்லோரும் சொன்னார்களே, அவருக்கு யாரும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு நன்மதிப்பைப் பெற்று நம்மிடத்திலே வாழ்ந்து மறைந்திருக்கின்ற நம்முடைய குன்னம் ராஜேந்திரன் அவர்களுக்கு நாம் இன்றைக்கு எல்லோரும் எல்லோரும் சேர்ந்து புகழஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறோம். அவருடைய புகழ் திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் பெரம்பலூர் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் இத்தனை பேர் இன்றைக்கு இவ்வளவு நேரம் அமைதியாக உட்கார்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை, இன்றைக்கு நீங்கள் பார்க்கிற ராஜா என்பது ஒரு கட்டி முடிக்கப்பட்ட கெட்டியான கோபுரம். இன்றைக்கும் ராஜாவை டெல்லியிலே பார்க்கிறவர்கள், பெரம்பலூரிலே பார்க்கிறவர்கள், சென்னையிலே பார்க்கிறவர்கள் எல்லாம் அந்த கோபுரத்தைப் பார்ப்பதை போல கோபுரத்தை மட்டும்தான் பார்ப்பீர்கள். ஆனால், இந்த கோபுரம் எழும்புவதற்கு முன்னால் எத்தனை குடைச்சலை, எத்தனை மன உளைச்சலை, எவ்வளவு தடங்களை, எவ்வளவு தடைகளை எல்லாம் தாண்டி வந்திருக்கிறது என்பது சிலருக்கு மட்டும்தான் தெரியும். அப்படிப்பட்ட தடைகளை எல்லாம் நான் தாண்டி வருகிறபோது, எனக்கு தோல் கொடுத்தவர் அல்ல, என்னைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிய மனிதர்தான் நம்முடைய குன்னம் ராஜேந்திரன் அவர்கள்.

நான் வழக்கறிஞராக இருக்கிறபோது, இந்த ராசி லாட்ஜ்ல மாடியில்தான் எனக்கு வழக்கறிஞர் அலுவலகம். அப்போ நானும் என்.ஆர். எல்லாம் கனரா பேங்க் அட்வைசர் லாயர். அப்பவே எங்களுக்கெல்லாம் இங்கெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்லாம் போகாம, நாங்கள் ரெண்டு பேரும் நல்லா சம்பாதிச்சு வக்கீலுங்க. ஏன்னா, கனரா பேங்க்ல தனியா பீஸ் வரும். அப்புறம் எங்க சீனியர் லாயர் பீஸ் குடுப்பாரு. அப்புறம் ஒரு கட்டத்திற்குப் பிறகு எங்க சீனியர் சொன்னாரு, “எல்லாமே எனக்காக பண்ணிட்டு இருக்கீங்க, உங்களுக்கு வர்ற கேஸை நீங்களே போட்டுக்கோங்க,” என்றார். அதனால, நாங்கள் ரெண்டு பேரும் திமிர் பிடிச்சவன், வக்கீல் சங்கத்துல. பார்ல நாங்கள் ரெண்டு பேரும் ஸ்கூட்டர்லயோ, பைக்லயோ போனா வந்துங்டாங்க, ரெண்டு பேரும் திமிர் பிடிச்சவங்க.
அறிவு கொஞ்சம் இருக்குது, அடக்கமில்லை என பேசுவாங்க. அப்படி நான் இருக்கிறபோது, அந்த மாடியில இருந்து பார்த்தா எதிர்ப்புறத்தில் துரை டீக்கடை. அந்த டீக்கடையிலதான் இவரு மதிமுகவில் இருப்பார். நாங்களெல்லாம் திமுக அனுதாபி.
நான் திமுகவுல நாடாளுமன்ற உறுப்பினர் ஆகணும்னு ஒரு காலமும் நினைச்சது இல்லை. இன்னும் சொல்லப்போனா, எம்பி சீட்டு வரதுக்கு முன்னாடி வரைக்கும் வேஷ்டி கட்டுனது இல்லை, ஆனா திமுக. தேவராஜனுக்கு ஏதாவது ஆபத்துன்னா, தேவராஜனுக்கு எது தேவன்னா, அன்னைக்கே நானும் வக்கீல் ராஜேந்திரன் செக்குல பணம் கொடுப்போம், இரண்டாயிரம் ரூபாய் அன்னைக்கு.
1989-ல வெறும் 2,000 ரூபாய். 90, 92-ல அதான், வைகோ பிரிஞ்சதுக்கு அப்புறம் இங்கதான் நிற்பார்.

எந்த நிகழ்ச்சியினாலும் கூட்டமெல்லாம் முடிஞ்சு, ஒரு 2,500 ரூபாய் துண்டு விழுவுதுன்னா என்கிட்ட வருவாரு தேவராஜன்.
குடுப்பார், கொடுப்போம். எங்களுக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்ல, திமுக கட்சி நல்லா இருக்கணும், நான் திமுக.
என்ன சொல்லப்போனா முகுந்தன் வரலன்னு நினைக்கிறேன். அதிகமா முகுந்தன் மாடியிலதான் இருப்பேன். அப்ப பாவேந்தர் இலக்கியப் பேரவைன்னு ஒரு இலக்கியப் பேரவை, அதுலதான் வருஷம் வருஷம் கவிதை, பேச்சுப் போட்டி எல்லாம் நடத்துவோம்.
திமுக-காரனே தவிர, திமுகவுல அரசியலுக்கு வரணும்னு நினைச்சதே இல்லை. எம்பியெல்லாம் வருவேன்னு நினைச்சதே இல்லை.

ஒரு பெரிய வெற்றிடகம் வந்துச்சு. வெற்றிடம் வந்தப்ப எனக்கு திருமணம், 1996 பிப்ரவரி 4-ஆம் தேதி திருமணம். அடுத்து ரெண்டு மாசத்துல எலெக்ஷன் வருது. திருமணத்துக்கு என்னுடைய உறவினர்ங்கிறதால பரிதி இளம்வழுதி பேர் போட்டிருந்தாங்க. எங்க வீட்ல நடந்த முதல் சுயமரியாதை கல்யாணம் எங்களதுதான். மீதி எல்லாரும் ஊரு ஐயா உக்காந்திருப்போம். கலியபெருமாளுக்கு அதுக்கு முன்னாடி, பின்னாடி, எங்க பெரியவர்கள் எல்லாத்துக்கும், நான் மட்டும்தான் ஊர்லேயே முதல் சுயமரியாதை கல்யாணம்.

நான் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு பத்திரிகை கூட கொடுக்கல. பரிதி வராருன்னு பெயர் போட்டதுனால அவருக்கு பத்திரிகை அனுப்பணுங்கிறதுக்காக போஸ்டர்ல அனுப்பி விட்டேன். அவரும் திருமணத்துக்கு வந்துட்டாரு. பரிதி உறவினர்கள் கூட வந்தார். வந்து பார்த்துட்டு, எங்க மாமனாரோட படத்தை முன்னாடி வச்சிருந்தாங்க. அவர் இறந்து போனதுனால அய்யாக்கண்ணு படத்தை முன்னாடி வச்சிருந்தாங்க. ஏன்னா, பொண்ணு வீட்டுக்காரங்க அவங்க வச்சிருந்தாங்க. மச்சான்லாம் அவங்க படத்தை வச்சிருந்தாங்க. அய்யாக்கண்ணு உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டார் சிவசுப்பிரமணியம். அவர் மகளைத்தான் கல்யாணம் பண்றேன், தாய் மாமன் வேனும். உடனே, அவரு அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எனக்கெல்லாம் சீனியர், ஆங்கிலம் நல்லா பேசுவாரு, பெரிய வக்கீல், எம்.பி.யா இருந்தாரு, நீங்க அவரு மருமகன்னு சொல்லலையேன்னாரு,

நான் உங்களை பார்த்திருக்கேன், தேவராஜ் கிளினிக்கில் வணக்கம் வைப்பேன், நானும் வருவோம், போவோம். தேவராஜன் இங் ஒரு மனவாளன்னு ஒரு டாக்டர், ஒரு இன்ஸ்பெக்டர் அடிச்சு தப்பா நடத்திட்டாருன்னு அவர் பேர்ல கேஸ் கொடுத்தேன் நானு. எல்லாம் பண்ணிட்டு இருந்தோம். எங்களெல்லாம் அபிப்பிராயம் உள்ள எஸ்.எஸ்.க்கு சிவசுப்பிரமணியத்துக்கு. ஆனா, நான் டிக்கெட் கேட்கிறேன்னு தெரியாது. அப்புறம் 96-ல போய் டிக்கெட் கேட்டு அதுலதான் வந்தோம். ஆனால், அதற்கு முன்பாகவே 93-ல மேலிருந்து அங்கிருந்து ஒரு சிகரெட் வச்சுக்கிட்டு மேலிருந்து சவுண்ட் விடுவாரு. வக்கீல் என்ன பார்த்து, இவர் மதிமுக-வில் இருக்காரு. வக்கீல், வைகோ வராரு, ஒரு ரூ2,000 பணம் கொடுத்துரு, அவர் பேர்ல போட்ட ரசீது பாரு. என்னங்கண்ணா, திமுகங்க? அதனால, என்ன குடுங்க பரவாயில்லை அப்படிம்பாரு.

Advertisement

நான் அப்பவே நினைச்சேன். சரி, இவர் திமுகவுக்கு ஒரு காலத்துல வந்துருவாரு. ரெண்டாயிரம் வாங்கிட்டு போயிடுவாரு. அப்புறம் டீ சாப்பிடுவாரு, வருவாரு, என்ட வருவாரு, பேசுவாரு. அப்புறம் ஏதாவது திடீர்னு லீகல் கேஸஸ்லாம் என்கிட்ட வந்து கொடுப்பாரு, சீல்னாக்க. இப்படித்தான் பழக்கம். அப்புறம், அதுக்குப் பிறகு அவர் திமுகவுக்கு வரணும்னாரு. அவர் வந்தார். வருகின்ற நேரத்தில்தான் நீங்கள் பார்க்கிற இந்த ராஜாவுக்கு உச்சக்கட்ட சோதனை.

96-ல் எம்பி, 18 மாசத்துல ஆட்சி போயிடுச்சு. திரும்ப 98-ல் ஒரு எலெக்ஷன். இருக்கிற அக்கா, தங்கை, அண்ணன், தம்பி இருக்கிற எல்லாத்தையும் முடிச்சிட்டோம். நகை கிகை எல்லாத்தையும் முடிச்சிட்டோம். அதுக்கு ஒரு 15 லட்சம். ஏற்கனவே ஒரு 15 லட்சம். திரும்ப 99-ல் எலெக்ஷன். ஜெயிச்சு தோத்துட்டோம் 98-ல. 99-ல் எலெக்ஷன் வருது. அண்ணன் முரசொலிமாறனுக்கு ரொம்ப பரிச்சயம் நானு. என்னுடைய ஆங்கிலத்திற்கு அவர் மரியாதை கொடுப்பார். ஒரு 32, 33 வயசுல கிராமத்துல இருந்து வந்து ஆங்கிலத்துல இப்படி பேசறார்னு எல்லாம் ரொம்ப மரியாதை கொடுப்பார். நல்லா வச்சிருப்பாரு, எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்த 99 தேர்தல்லதான் ராஜாவுக்கு டிக்கெட் கொடுக்கக்கூடாதுன்னு பெரம்பலூர் அரியலூர்ல இருந்து மூணு பஸ்ல வந்தாங்க. அரியலூர்ல இருந்து மூணு பஸ்.

அதுலதான் குன்னம் ராஜேந்திரன் யாருன்னு உங்களுக்கு தெரியணும். இந்த ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் என்னுடைய குருநாதர் சிவசுப்பிரமணியத்துக்கு ஒரு அணி. அவரை எதிர்க்கிறது அரியலூர் ஆறுமுகம்,, க.சோ கணேசன் ஒரு அணி, ஜெயங்கொண்டம் கண்ணனுடைய அப்பா. செல்லக்கருப்பண்ணன் நம்ம பழைய ஒன்றிய சேர்மன் இங்க இருந்தாரு. நான் சிவசுப்பிரமணியம் அணி. என் பேர்ல எந்த தப்பும் இல்லை. அன்றைக்கு தமிழ்நாட்டில் எனக்கு கொடுத்த கேஸ் கூப்பனை, எனக்கு கொடுத்த டெலிபோனை, ஒரு பைசா வாங்காமல் கொடுத்தவன் ராஜாதான் என்று அண்ணன் முரசொலிமாறன் கலைஞரிடத்திலே சொன்னார்.

ஒரு கோடி ரூபாய் எம்பி தொகுதி, ஒரு பைசா கூட வாங்காமல் கொடுத்த ஒரே எம்பி மாமா, இந்த பையன்தான் அப்படின்னு சொன்னார். இவ்வளவு இருந்தும், என் மேல கோபம் இல்லை. சிவசுப்பிரமணியம் ஒரு அணி, அரியலூர் ஆறுமுகம் அண்ணன் ஒரு அணி.

பெரிய சண்டை. சிவசுப்பிரமணியன் ஆள் ராஜா உன்னோட. இங்கிருந்து ஏழு பஸ் நாலு பஸ் அஞ்சு பஸ் கிளம்புது. அதில் மறைந்த செல்லக்கருப்பணன்தான், குன்னம் ராஜேந்திரனைக் கூப்பிட்டு ராஜேந்திரா, ஆறுமுகத்தைக் கூட்டிட்டுப் போ ராஜாவை. அவங்க சண்டை அவங்களோட வச்சு சொல்லு. எனக்கு அரசியல் வரலாற்றில், வெங்கலம் மணிக்காலத்திலிருந்து எத்தனையோ எம்பி எம்எல்ஏ பார்த்துட்டேன். 32 வயசு 33 வயசுல இப்படி ஒரு யோக்கியமான பையன் நல்ல குடும்பத்துப் பையன் நமக்கு கிடைக்க மாட்டான்.

உங்க சண்டை எல்லாம் அங்க வச்சுக்குங்க. ஆறுமுகத்து கிட்ட சொன்னேன்னுசொல்லு. ராஜேந்திரா உன் பொறுப்பு.. இல்லன்னா ஆறுமுகத்திற்கும் எனக்கும் சண்டை வரும்னு சொல்லிட்டார். குன்னம் ராஜேந்திரன் தான் கூட்டிட்டுப் போறாரு. கூட்டிட்டுப் போய் வாங்க என்னங்க அப்படின்னாரு. ஏன்னா திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்னு ஆறுமுகம் சொன்னாரு, கோபம் என் மேல இல்ல, அவர் பேர்ல இல்ல. அன்றைக்கு அண்ணன் ஆறுமுகத்தை சரிசெய்து, ராஜாவுக்குத்தான் டிக்கெட் கொடுக்கணும். அவருக்கு மேல எல்லாம் சரி இருந்தா கூட, நீங்க போய் வம்பு இழுத்தீங்கன்னா தலைமை எப்பயுமே என்ன நினைக்கும்.

தலைமை என்ன நினைக்குன்னா தலைமைக்கு நான் வேண்டியவனா இருந்தா கூட, அங்க போய் 10 ஒன்றியச் செயலாளர்கள், எட்டு ஒன்றியச் செயலாளர்கள் முடியாதுங்க, அவரை ஒத்துக்க முடியாது தோத்து போயிருவாங்கன்னா, தலைவருடைய மனம் எப்படின்னான் எப்பயுமே, யார் தலைவரா இருந்தாலும் ஞானமூர்த்தியா இருந்தாலும் யாரா இருந்தாலும் என்ன நினைப்பாங்கன்னா சரி, ராஜா நல்ல பையன் வேற எதைனா பண்ணிக்கலாம். இப்ப சிக்கல் வேணாம். அப்படித்தான் நினைப்பாங்க. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்துவிடும் என்பதற்காக, அன்றைக்கு குன்னம் ராஜேந்திரன், எல்லாத்தையும் போய் பார்த்து, சரி செய்தது மட்டுமல்ல, சரி பண்ணாரு.

ஆனா, இன்டர்வீயுவிற்கு போற வரைக்கும் யாரு? கலைஞர் வந்து என்னை இன்டர்வியூ பண்ணிட்டு வாங்க பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியச் செயலாளர்கள்லாம் உள்ள வாங்கன்னு கூப்பிடுவாங்க அப்ப, அப்ப போகும்போது ஏதோ பேசுவாங்கல்ல, அதுக்காக வக்கீலோட இருக்காரு ராஜேந்திரன் இருக்காரு. இந்த குன்னம் ராஜேந்திரன் அந்த அறிவாலயத்துல இப்ப எல்லாம் சிலை இருக்குல்ல அப்பலாம் மண்ணு கொட்டியிருக்கும். மண்ணுலதான் உட்கார்ந்திருப்போம் எல்லாம்.

யாரும் தப்பா பேசக்கூடாதுன்றதுக்காக ஒரு 10 சிகரெட் குடிச்சிட்டு, சாயங்காலம் 5:00 மணியிலிருந்து எங்களை கூப்பிடும்போது 8:45. இந்த 8:45-க்குள்ள அவர் வந்து 10 பேர்ல கால்ல மட்டும் தான் விழுவல, எனக்காக. அவ்வளவும் செய்து, 99 ல எனக்கு மீண்டும் டிக்கெட் வருவதற்கு காரணமாக இருந்த, இரண்டு மூன்று பேரில் குன்னம் ராஜேந்திரன் மிக முக்கியமானவர்.

அதற்காகத்தான் அவர் எது சொன்னாலும், அவர் எது கேட்டாலும், மாவட்ட செயலாளரா, எஸ்சி வரலண்ணாங்க, அப்ப துரைசாமியை போட்டோம். கொடுக்கும்போது அவருக்கு இனிச்சது, அப்புறம் எடுக்கும்போது அழுவுறாரு, திட்டறாரு. நம்ம என்ன பண்ண முடியும்?

அப்புறம், பொது தொகுதி வைக்கணும்னாங்க, குன்னம் ராஜேந்திரனை சொன்னோம். நான் இன்னொன்னு சொல்றேன், நான் மாவட்டச் செயலாளர் ஆயிட்டேன். உள்ளூர்ல நான் சண்டைன்னா நான் மாவட்டச் செயலாளர் ஆயிட்டாங்க. அப்ப குன்னம் ராஜேந்திரன் அவர்கள் தான் மாவட்டத் துணைச் செயலாளர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிதி வந்து 50 லட்சம் டார்கெட் கொடுத்தாங்க. திருச்சிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாங்க. அப்ப கலைஞர் எவ்வளவு வசூல் ஆகுதுன்னு கேக்குறாரு. பெரம்பலூர்ன உடனே, அவரு மாவட்டச் செயலாளர், சேம் மினிஸ்டர் வரமாட்டாரு.

இங்க ஒரு ரிமோட் மாவட்டச் செயலாளர் வச்சிருப்பாரா, அவரை கூப்பிடு குன்னம் ராஜேந்திரனை அப்படிங்கிறாரு. குன்னம் ராஜேந்திரனுக்கு கலைஞர் வாயால் பெயர் ரிமோட் மாவட்டச் செயலாளர். அங்கிருந்து ஆபரேட் பண்ணா இங்க அவரு இயங்குவாராம். என்ன ராஜேந்திரன் உங்களுக்கு டார்கெட் 50? இல்லைங்க, நாங்க 60 தாண்டிட்டோம், 75 கொடுத்துருவோங்க. என்னங்க, டெல்லியில உட்கார்ந்துட்டே அணுக்குண்ணடு போடூறீங்களா? அன்றைக்கு 75 லட்சம் ரூபாய் வசூல் பண்ணிக் கொடுத்த ஒரு மாவட்டம், டார்கெட்டை தாண்டி கொடுத்த மாவட்டம், நம்முடைய குன்னம் ராஜேந்திரன் அவர்கள் துணைச் செயலாளராக இருந்து போது,

உடனே அது மட்டும்தான் செய்வார். அவர் என்ன விரும்புவாரோ அதை தட்டாமல் செய்வேன் என்று ஒரு எண்ணம் எனக்கு உண்டு. எல்லாவற்றையும் தாண்டி என்னுடைய துணைவியாருக்கு பேர்ல அவருக்கு பெரிய மரியாதை உண்டு. எப்போ பார்த்தாலும் விசாரிப்பது, பார்க்கிறது, போவதெல்லாம் ரொம்ப ரொம்ப கண்கலங்க வைக்கும், அவர் உடம்பு சரின்னா. அப்படி ஒரு பாங்கோடு பழகியவர்கள் நாங்கள்.

இப்ப கடைசியா வந்து கேட்டார், எனக்கு பால்வளம் டைரக்டர் வேணும்னு கேட்டார். கால் முடியாதோட வந்தார், ரமேஷ் தான் கூட்டிக்கொண்டு வந்தான். எனக்கு என் உடம்பை பாருங்கன்னு சொல்லாமல் ஒரு எண்ணம், ஆனா கேட்டாரு. போங்க, டைரக்டர்தானே வேணும்? வந்தா உங்களுக்குத்தான் முதல் டைரக்டர். உங்களைத்தாண்டிதான் திருச்சி மாவட்த்திற்கு போகங்ன்னு, சொன்னேன். கிளம்பி போயிட்டார். எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு ராஜா வளர வேண்டும் என்று சொன்னால், அதில் யாராவது ஒருத்தர் வரணும்னா, நீங்கள் இன்றைக்குப் பார்க்கிற பிம்பம், இன்றைக்கு டெல்லி அலறுகிறது, நாடாளுமன்றம் அலறுகிறது, சர்வகட்சி தலைவர்களும் மதிக்கிறாங்க என்றெல்லாம் சொன்னாலும் கூட, அதற்கு இந்த கோபுரத்திற்கு அடி நாதமாக இருந்து, அடிக்கல்லாக இருந்து, இந்த கோபுரத்தைத் தாங்கிப் பிடித்தவர்களில் குன்னம் ராஜேந்திரன், என் வாழ்வில் மறக்க முடியாத ஒருவர்.

எங்க அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தது, ஒருத்தர் வீட்டுல தாகத்துக்கு தண்ணி குடிச்சிட்டா, அந்த வீட்டுக்கு நன்றியா இருக்கணும்னு சொல்லுவாரு. அது எங்களுடைய குடும்பத்துல எல்லாரும் கடைப்பிடிப்போம். யார் யாருக்கு என்ன செய்யணும், நமக்கு என்ன செய்தாலும் அது மாதிரி பத்து மடங்கு திருப்பி செய்ய நினைக்கிற ஆள் நான். எனவே அந்த ஒரு நன்றி உணர்வோடுதான் குன்னம் ராஜேந்திரன் அவர்களுக்கு இத்தனை பதவிகளையும் நாம் தந்தோம்.

இன்றைக்கும் அந்த குடும்பத்திற்கு எல்லா வழிகளிலும் செய்ய வேண்டும். இன்றைக்கு இந்த மாவட்டத்தில அண்ணா தாவூத்தா இருந்தாலும், சிறுநிலா முருகேசனாக இருந்தாலும், வெள்ளைச்சாமி அப்பாவா இருந்தாலும், இன்றைக்கும் அந்த குடும்பத்திற்கு நான் எங்கிருந்தாலும் அவருடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் தான் இந்த ராஜா என்பதை நான் என்றைக்கும் பெருமையோடு சொல்லிகிறவன்.

எனவே அப்படிப்பட்ட உணர்வோடு இருக்கின்ற நம்முடைய குன்னம் ராஜேந்திரனுடைய குடும்பத்தார்களுக்கும் இந்த சகோதரர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்திலே வாய்ப்புகள் வருமானால், எல்லாம் தந்துருவோம்லாம் யாராலும் சொல்ல முடியாது. காலம் மிக முக்கியமானது. நீங்க வந்து, 96 ல, கலைஞர் வந்து என்னிடம் சொல்றாரு, தேவராஜன் சீனியர்ப்பா, அவருக்கு MP வச்சுக்கிட்டோம், நீ MLA போன்னாரு. எனக்கு ஒன்னும் இல்ல என்கிட்ட.

அந்த முறசொலி மாறத்தான், அவர் ML அரசியல சட்டம் படிச்சிருக்காரு மாமா, அங்க அனுப்புங்கன்னாரு. அப்புறம் 18 மாசத்துல ஆட்சி போச்சு, எங்க அம்மா அழுவுது. எப்ப பார்த்தாலும் மாறான பேச்சு கேட்டா, கலைஞர் பேச்சு கேட்டுக்கலாமேன்னுச்சு. ஆனா அடுத்த ஆட்சி காலத்துல திரும்ப நேரா சென்டரல் மினிஸ்டராக ஆனேன், தேவராஜன் MLA வாவே இருக்கிறார். எதுக்குச் சொல்றேன்னா, நம்ம என்னதான் முயற்சி செய்தாலும், சிலபேருக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லை. பெரியார், காலதேசம் வருத்தமானம் என்பார்.

ஏற்படுகிற சூழல், நடக்கிற விதம், வைகோ நாமளால போகச்சொன்ன வெளில, வைகோ போகலைன்னா பெரம்பலூர்ல நான் MP ஆகியிருக்க முடியாது. ஏன்னா அட்சயகோபல் எல்லாம் யாருன்னு எனக்கு தெரியாது. எனக்கு சீனியர்ஸ்லாம் இருந்தாங்க. எனவே, எதற்கும் தருகிறேன்னு அப்படியே தூக்கி எடுத்து விட்டுர முடியாது. அதற்கான காலதேச வர்த்தமானம், அதற்கான அவருடைய உழைப்பு, அவருடைய பங்களிப்பு எல்லாம் இருக்க வேண்டும். ஒன்றை தெளிவுபடுத்துவோம், அந்த குடும்பத்தை என்றைக்கும் நாங்கள் கைவிட மாட்டோம், மறந்துவிட மாட்டோம்.

அவருடைய புகழ் எவ்வளவு காலம் நிலைச்சிருக்குமோ, நாங்கள் இருக்கிற வரை, இந்த இயக்கம் இருக்கிற வரை அந்த குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லி, அவருடைய புகழ் வாழ்க என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம் என பேசினார்.

முன்னதாக, படத்திறப்பு விழா செய்து வைத்த திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ பேசியதாவது:

திமுகவை பொறுத்த வரை திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அடிமட்டத்தில் இருந்து உருவாகி ஒன்றிய செயலாளராகி வந்தவர்கள் தான் எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக, அமைச்சராக மாறியுள்ளனர். குறிப்பாக அனைவரும் திமுகவில் அடிமட்டத்தில் பணியாற்றித்தான் மேலே வந்திருக்கிறார்கள். தொடர்ந்து இந்தக் கட்சி நிரந்தரமானது. என்றைக்கும் திமுக பெரம்பலூரை விடாது. பெரம்பலூர் திமுகவை விட்டு விடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சியைக் கூறமுடியும். மறைந்த குன்னம் ராஜேந் திரன் ஒன்றியச் செயலாளர் இருந்தபோது நான் ஒன்றிய செயலாளர் பதவியில்கூட இருக்கவில்லை. சாதாரண உறுப்பினராக தான் இருந் தேன். கிளைச் செயலாளர் பதவிக்குக் கூட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுத்தான் வந்தேன். வட்டச் செயலாளராக இருந்து ஒன்றிய செயலாளராக மாறிய காலம் உண்டு. எனவே தான் அடிமட்டத்தில் உழைக்கிறவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் தகுந்த முன்னேற்றமும் திமுகவில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் மேடையிலே எங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். எனவே, திமுக நிரந்தரமானது, அதில் பணிபுரியும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். மறைந்த குன்னம் ராஜேந்திரன் குடும்பத்திற்கு திமுக எப்போதும் துணையாக நிற்கும் என பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வெ.கணேசன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், வக்கீல் ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, பரமேஸ்குமார், முன்னாள் எம்எல்ஏ பிர பாகரன் மற்றும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அனைத்து அணி நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மாற்றுக் கட்சியினர் பலரும் திரளாக கட்சி பேதமின்றி கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார். விழாவில் அனைவருக்கும் அறுசுவை பரிமாறப்பபட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.10.2026 - 19:25:27
Privacy-Data & cookie usage: