‘Maternal Uncle’s Gold Ring’ scheme; to launch in Perambalur tomorrow: Collector announces!
“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தாய்மையினையும் குழந்தை பிறப்பின் பெருமையினையும் உணர்த்தவும், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் குழந்தை பிறப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது உள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் “தாய்மாமன் தங்க மோதிரம்” வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் தொடக்க விழா 28.09.2026 அன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 முற்பகல் 12.00 மணி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற, e-KYC பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை, குடியிருப்பு சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நலவாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறை மூலம் வழங்கப்பட்ட முகவரி சான்று உள்ளிட்ட தமிழ்நாடு குடியிருப்பை உறுதி செய்யும் 6 அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை பெற்றுள்ள தாய்மார்கள் தகுதியுடையவர்களாவர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 22.06.2026 முதல் ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் பிரசவித்துள்ள தகுதியான தாய்மார்களுக்கு நிலுவையில் உள்ள தங்க மோதிரங்கள், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 29.09.2026 முதல் 13.10.2026 வரை குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்பட உள்ளன. 29.09.2026, 03.10.2026, 07.10.2026 மற்றும் 10.10.2026 ஆகிய நாட்களில் காலையில் ஆலத்தூர் வட்டார பயனாளிகளுக்கும், 30.09.2026, 05.10.2026, 08.10.2026 மற்றும் 12.10.2026 ஆகிய நாட்களில் காலையில் வேப்பூர் வட்டார பயனாளிகளுக்கும், 01.10.2026, 06.10.2026, 09.10.2026 மற்றும் 13.10.2026 ஆகிய நாட்களில் காலையில் வேப்பந்தட்டை வட்டார பயனாளிகளுக்கும், 29.09.2026 முதல் 13.10.2026 வரையுள்ள நாட்களில் மாலை 02.00 மணியளவில் பெரம்பலூர் வட்டார பயனாளிகளுக்கும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தங்க மோதிரம் வழங்கப்படும்.
பயனாளிகளின் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்க மோதிரம் காலை 10.00 மணி மற்றும் மதியம் 2.00 மணி என இரு நேரங்களில் வழங்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நாள்தோறும் காலை 25 பேருக்கும், மதியம் 25 பேருக்கும் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு மட்டுமே மோதிரம் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ்கள் அந்தந்தப் பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். எனவே, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டும் பயனாளிகள் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், 8754717681 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், தங்களுக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் தொடர்புகொண்டு உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://perambalur.nic.in/ என்ற வலைத்தளத்திலும் கண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.