Meghadad dam: Reject the detailed project report of Karnataka; R. Anbumani, Dharmapuri MP

File Copy :

தருமபுரி எம்.பி ரா.அன்புமணி விடுத்துள்ள அறிக்கை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் மிகப்பெரிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை, தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி கர்நாடகம் செய்து முடித்திருக்கிறது. அதனடிப்படையில் தயாரிக்கப் பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள கர்நாடக அரசு, அதனடிப்படையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரியிருக்கிறது.

மேகதாது அணை கட்டுவது உள்ளிட்ட காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும், மத்தியில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும், கர்நாடகத்துக்கு சாதகமான நிலைப்பாட்டையே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கடந்த நவம்பரில் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் தான் விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அளித்துள்ளது. கர்நாடகத்தின் இந்த கோரிக்கையை ஏற்கலாமா? என்று கேட்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக்காக விரிவான திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவே தமிழ்நாட்டுக்கு எதிரான, கர்நாடகத்துக்கு சாதகமான நடவடிக்கை ஆகும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட வேண்டுமானால் அதற்கு காவிரி பாசன மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களின் ஆதரவு அவசியமாகும். ஆனால், தமிழகத்தின் ஒப்புதலின்றி விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை கர்நாடகத்துக்கு மத்திய அரசு வழங்கியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, ‘‘விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிபந்தனை அடிப்படையில் தான் அனுமதி அளிக்கப்பட்டது. அணை கட்டுவதற்கு அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்தால், அத்துடன் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் கடிதத்தையும் இணைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி அளிக்கப்படாது’’ என்று கூறியிருந்தது.

ஆனால், மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. மேகதாது அணைக்கான முன் சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளின் சம்மதம் வேண்டி கர்நாடகம் அரசு அனுப்பியிருந்தது. எனினும், எந்த மாநிலமும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அத்தகைய சூழலில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க கூடாது. அதற்கு மாறாக மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்க மத்திய நீர்வள ஆணையம் முடிவு செய்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பிய போது அதனுடன் தமிழகத்தின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி கடந்த 2015-ஆம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய நிலைப்பாட்டுக்கு எதிரான எந்தவொரு முடிவையும் மத்திய அரசு ஒருபோதும் எடுக்கக்கூடாது.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியில் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்பது உறுதி.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும், காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கக்கூடாது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!