Mela in 4 Localities : Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் (பொ) நா.அங்கையற்கண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின், மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பொது கால கடன், தனிநபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சிறுகடன், கறவைமாட்டுக் கடன் போன்ற பல்வேறு கடன் திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

டாம்கோ/டாப்செட்கோ கடன் வழங்கும் திட்டம் குறித்து லோன் மேளா பெரம்பலூர் மாவட்டத்தில், தாலுகா வாரியாக 08.08.2022 அன்று பெரம்பலூர் – பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 10.08.2022 அன்று வேப்பந்தட்டை – தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 11.08.2022 அன்று வேப்பூர் – குன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 12.08.2022 அன்று ஆலத்தூர்-இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் லோன் மேளா நடைபெற உள்ளது.

கடன்தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். டாம்கோ கடன் பெற ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000-மும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 1,20,000-மும் இருத்தல் வேண்டும். டாப்செட்கோ கடன் பெற ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்குள் இருத்தல் வேண்டும். லோன் மேளா நடைபெறும் நாட்களில் சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, தொழில் செய்வதற்கான திட்ட அறிக்கை போன்ற ஆவணங்களை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

லோன் மேளாவில் கலந்து கொண்டு டாம்கோ/டாப்செட்கோ கடன் திட்டங்களில் கடனுதவிகளை பெற்று பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!