பெரம்பலூர் அருகே நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு!

schedule
2023-01-05 | 01:23h
update
2023-01-05 | 01:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Nayak period Mesolithic discovery near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், தழுதாழை கிராமத்தில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய நாயக்கர் கால நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. தழுதாழை பகுதியில் வரலாற்று ஆய்வாளர் முனைவர் மகாத்மா ம.செல்வபாண்டியன் கள ஆய்வு மேற்கொண்ட போது “அவ்வா தாத்தா கோயிலில் “(தாத்தா பாட்டி கோயில்) உள்ள நாயக்கர் கால நடுகல்லையும் அதில் உள்ள கல்வெட்டையும் கண்டறிந்தார். இது குறித்து செல்வபாண்டியன் கூறியதாவது:

தழுதாழை கிராமத்தில் இருந்து பெரியம்மாபாளையம் செல்லும் சாலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள “அவ்வா தாத்தா கோயிலில்”(பாட்டி தாத்தா கோயில்) உள்ள பலகைச் சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 17-18-ம் நூற்றாண்டில் வள்ளுவப்பாடியின் தலைவரான சவாரு சின்னவாட் நாயக்கர் என்பாருக்கு எடுக்கப்பட்ட நினைவுக் கோயில் ஆகும்.இங்குள்ள பலகைச் சிற்பத்தில், ‘வள்ளுவப்பாடி நாடுடைய சவாரு சின்னவாட் னாயக்கர் கோயில்” எனும் கல்வெட்டு காணப்படுகிறது.

குத்துக்கற்கள் நட்டு வைக்கப்பட்ட திறந்தவெளியே “அவ்வா தாத்தா கோயில்”எனப்படுகிறது. பெரும் குத்துக்கல் “தாத்தா” எனவும்,ஒன்றரை அடி உயரத்துடன் வணங்கிய நிலையில் உள்ள பெண் சிற்பம் “அவ்வா” (பாட்டி) எனவும் வணங்கப்படுகின்றன. பிற குத்துக்கற்கள் முன்னோர்களாகக் கருதப்பட்டு வணங்கப்படுகின்றன.

Advertisement

கல்வெட்டு இடம் பெற்றுள்ள பலகைச் சிற்பத் தொகுதியில் சிவிகையில் மகாராஜ லீலாசனத்தில் (அமர்ந்த நிலை) ஒருவர் காட்டப்பட்டுள்ளார். இவரே ‘சவாரு சின்ன வாட் நாயக்கர்’ஆகலாம். சிவிகையை முன்புறம் ஒருவரும் பின்புறம் இருவரும் என மூன்று ஆடவர்கள் சுமந்து செல்கின்றனர். சிவிகையின் முன்புறம் ஒருவர் வாளேந்திச் செல்ல, அடுத்தவர் வெண் கொற்றக் குடையைத் தாங்கியுள்ளார் இவ்வரிசையின் பின்பகுதியில் அணிகலன்கள் பூட்டி அலங்கரிக்கப்பட்ட அழகிய புரவியை ஆடவர் ஒருவர் அழைத்து வருகிறார். புரவியின் பின்னே வாளேந்திய வீரர் இடம் பெறுகிறார் ஏழு ஆடவர்களின் தலையும் படியச் சீவி கொண்டையிடப்பட்டுள்ளன. கழுத்தணி, தோள்வளை, கைவளை, இடைக்கச்சு, அரையாடை, தண்டை ஆகியவற்றால் ஆடவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வரிசையின் முன் செல்பவரும் இறுதியாகச் செல்பவரும் வாளேந்தியுள்ளனர். கயிறு ஒன்றினால் குதிரை, சிவிகையின் பின்புறம் பிணைக்கப்பட்டுள்ளது. சிவிகையின் முன்புறமும் பின்புறமும் அழகிய ஆடைத் தொங்கல்கள் காணப்படுகின்றன. படியச் சீவிக் கொண்டை இட்ட தலையலங்காரத்துடனும் கழுத்தணி, தோள்வளை, கைவளை, இடுப்புக்கச்சு, அரையாடையுடனும் அமர்ந்த நிலையில் சிவிகையில் ஒர் ஆடவர் காணப்படுகிறார். இவரே வள்ளுவப்பாடி நாட்டுத் தலைவரான சவாரு சின்னவாட் நாயக்கர் ஆகலாம்.

வள்ளுவப்பாடி நாட்டின் (இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், முசிறி, துறையூர் வட்டம் அடங்கிய பகுதி) தலைவரான இப்பெருமகன் வன்னாட்டுப் பகுதிக்கு (இன்றைய பெரம்பலூர் மாவட்டப் பகுதி) வருகை தந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இப்பகுதியில் எதிர்பாராத விதமாக உயிர்நீத்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பள்ளிப்படைக் கோயிலாக (நினைவுக் கோயில்) இதனைக் கருதலாம்.

கடந்த 2002ம் ஆண்டில் அறிஞர் இரா.கலைக்கோவன், தழுதாழையில் திரு.சிவநாதன் என்பாரின் வயற்பகுதியில் இருந்த கல்வெட்டுச் சிற்பத்தைக் கண்டறிந்தார். இச்சிற்பத்தில் குடையொன்றை ஏந்திய காவலாளும் வாளை நிலத்தில் ஊன்றிய நிலையில் இரு ஆடவர்களும், அவர்கள் அருகே வலக்கையில் மலர் கொண்ட பெண் ஒருவரும் காட்டப்பட்டுள்ளனர்;. இச்சிற்பத்தின் மேற்பகுதியில் ‘சவாரு சிண்ணவெடி நாயக்கர் கொடி’ என்ற கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

தொண்டமாந்துறையைத் தழுதாழையுடன் இணைக்கும் இந்த ஒற்றையடிப் பாதையே, அந்நாளில் சிண்ணவெடி நாயக்கர் கொடியென அறியப்பட்டதாகக் கொள்ளலாம்’ என அவர் குறிப்பிடுகிறார். மேலும் இக்கல்வெட்டின் எழுத்தமைதியைப் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டாகக் கணித்துள்ளார். (இரா.கலைக்கோவன். 2002 : 222 – 223) இக்கல்வெட்டின் குறிப்பிடப்படும் ‘சவாரு சிண்ணவெடி நாயக்கர் என்பாரும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘சவாரு சின்னவாட் நாயக்கர்’ என்பாரும் ஒருவரே ஆகலாம்.

இப்பெருமகனாரைக் குறித்த மற்றொரு கல்வெட்டே, ‘ஔவ்வா தாத்தா கோயில்’ கல்வெட்டு எனலாம். இது போயர் சமூக மக்களின் முன்னோர் வழிபாட்டுக் கோயிலாகும். இக்கண்டுபிடிப்பின் வழி, சவாரு சின்னவெடி நாயக்கர் வள்ளுவப்பாடி நாட்டின் தலைவர் அல்லது அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் இப்பகுதிக்கு வந்த போது உயிர் நீத்ததால் அவர் நினைவாக ஒரு கோயில் எழுப்பப்பட்டது என்பதையும் அறிய வருகிறோம். என தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 02:02:47
Privacy-Data & cookie usage: