புதிய விரிவான மினி பஸ் திட்டம்; பெரம்பலூரில், ஆர்.டி.ஓ-க்களுடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

schedule
2025-02-20 | 10:26h
update
2025-02-20 | 10:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New Comprehensive Mini Bus Scheme; Transport Minister Sivashankar inspects with RTOs in Perambalur!

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், புதிய விரிவான மினி பஸ் திட்டம் – 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான (RTO) ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

முதன்மை செயலாளரும், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையருமான சுன்சோங்கம் ஜடக் சிரு,பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 மூலம் இதுவரை எத்தனை புதிய வழித்தடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளது என்பது குறித்தும், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் எவையெல்லாம் மாவட்ட அரசிதழில் வெளிவந்துள்ளது என்பது குறித்தும் ஒவ்வொரு மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்கள் வாரியாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிற்றுந்து இயக்குவது தொடர்பாக எத்தனை விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது என கேட்டறிந்த அவர், சிற்றுந்து திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடமும் கருத்துக்களை கேட்டு சிற்றுந்து இயக்கம் தேவைப்படும் வழித்தடங்கள் குறித்தும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

பின்னர், போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், புதிய மினி பஸ் திட்டம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அதற்காக ஒப்பந்தம் வெளியிடப்பட்டு புதிய மனுக்களும் பெறப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் மினி பஸ் இயக்கம் தொடர்பாக எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது, அதற்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை குறித்த இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்திலேயே மினி பஸ்கள் இயக்கம் என்ற சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மேலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கும் மினி பேருந்து சேவையை நீட்டித்து, அதன் மூலம் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து வசதி பெறுவதுடன், மற்ற இடங்களுக்கும் போக்குவரத்து இணைப்பு கிடைக்கும் என்பதற்காக மினி பஸ் சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே-2025 மாதத்திற்கு முன்பாக இத்திட்டத்தினை முழுவதுமாக முடித்து செயல்படுத்துவது தான் போக்குவரத்து துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதற்காக இந்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 62 வழித்தடங்களுக்கான மினி பேருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மினி பேருந்து இயங்காத வழித்தடங்களின் உரிமையாளர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரும்பினால் அந்த வழித்தடத்தில் தொடரவும், முடியாத பட்சத்தில் வழித்தடத்தினை ரத்து செய்து புதிதாக வழித்தடம் துவங்கப்பட்டு மினி பேருந்து சேவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சேவைகளை சிறப்புடன் செம்மைபடுத்துவதற்காக புதிய மினி பேருந்து வழித்தடங்களை அப்பகுதிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அழகரசு, துணை போக்குவரத்து ஆணையர்கள் செல்வகுமார், ஜெயக்குமார், திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு மண்டலங்களுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 01:37:58
Privacy-Data & cookie usage: