Perambalur: 3-Day Training Workshop for Census; Collector Inaugurates!
பெரம்பலூர் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடவுள்ள மாவட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்புகளை கலெக்டர் ஷரண்யா அறி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1007, வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு என்ற தலைப்பிலான கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்ட அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு மக்கள் தொகை இயக்குநரக இணை இயக்குநர் ஜெகதீசன், உதவி இயக்குநர் சுனிதா, புள்ளியியல் ஆய்வாளர் வினய் முரளி ஆகியோர் 27.04.2026 அன்று முதற்கட்ட பயிற்சி வழங்கினர். அதன் தொடர்ச்சியாக 3 நாள் பயிற்சி இன்று நடத்தப்பட்டது. இதில் உதவி இயக்குநர் சுனிதா அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கினார்.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: இந்தியாவில் 1872 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். கிராமம், நகரம் மற்றும் வார்டு அளவில் முதன்மைத் தரவுகளின் மிகப்பெரிய ஆதாரமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளது. வீடுகளின் நிலை, வசதிகள், சொத்துகள், மக்கள் தொகை, மதம், மொழி மற்றும் கல்வி, பொருளாதார நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பண்பளவுகள் குறித்த நுண்ணிய அளவிலான தரவுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கப்படுகின்றது. நீங்கள் சேகரிக்கும் ஒவ்வொரு தரவும் மிகவும் முக்கியமானது.
“மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கான அடிப்படையாகும். நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் இந்த கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில்தான் உருவாகும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்கள், தகவல்களை துல்லியமாக சேகரிக்க வேண்டும், என அவர் தெரிவித்தார். அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.