Perambalur: “A phrase I admired from Kalaignar”—this serves as a fitting comeuppance—and more is yet to come—for DMK President M.K. Stalin, who failed to honor his own father’s words! — BJP’s Pon. Radhakrishnan in an interview.
பெரம்பலூர் மாவட்டத்தில், பிஜேபியுடன் கூட்டணி வைத்த கட்சிகள் சட்ட மன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதற்கான காரணம் என்ன? என்பதை குறித்து, முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. பின்னர். அதில் கலந்து கொண்ட பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்காக களம் இறங்கி மிகக் கடுமையாக உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு கூட அடுத்து வரக்கூடிய காலகட்டங்களை வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும். உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், அதனை அடுத்து வரவிருக்கக்கூடிய சட்டமன்ற தேர்தல் இவை அனைத்தையுமே மனதிலே கொண்டு இன்று துவங்கி நம்முடைய பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தினுடைய மிக முக்கியமான தலைவர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டார்கள். அவர்களுடைய கருத்துக்களையும் சொன்னார்கள், அவர்களுக்கு என்னுடைய நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களுடைய உழைப்புக்கு அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி முழு துணையாக நிற்கும் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(செய்தியாளர் )கேள்வி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி, குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எல்லாம் எடுத்திருக்கிறார். இதற்கு முன்னாடி நிறைய சம்பவங்கள் நடந்திருக்கிறது, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுப்போம் என வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்திருக்கிறார், துவக்கமே சரியில்லாமல் இருக்கிறதே? இதை எப்படி பார்க்கிறீங்க?
பதில் (பொன்.ராதாகிருஷ்ணன்): புதிதாக முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய மரியாதைக்குரிய விஜய் அவர்களுக்கு முறைப்படியான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன், அதே நேரம் அலங்கார வார்த்தைகளோ, ஆறுதலான வார்த்தைகளோ ஒரு நிரந்தர பாதுகாப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் பெண்களுக்கோ, இளைஞர்களுக்கோ, பொதுமக்களுக்கோ கொடுக்க முடியாது என்பதை தமிழக முதல்வர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று சொன்னால், ஒவ்வொரு சம்பவமும் நடக்கும்போது அதற்கான தீர்வுகளை கூறாமல் அல்லது எடுக்காமல் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய வகையில் அனுபவம் நிறைந்த அதிகாரிகள் தேவைப்பட்டது என்று சொன்னால், இது ஒட்டுமொத்த தமிழகத்தினுடைய பிரச்சனை. யார் யாரிடம் எல்லாம் அவர் ஆலோசனை கேட்க விரும்புகின்றாரோ தமிழகத்தின் நலன் கருதி, அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: மேகதாது அணை விவகாரமாக இருக்கட்டும், அல்லது நீட் விவகாரமாக இருக்கட்டும், திமுக சார்பிலேயே இவரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறேன் என்று சொல்லிட்டு இருக்கிறார், நீங்க மத்திய அரசோட ஒரு முக்கிய தலைமையில் கட்சியில் இருக்கிறீங்க, இந்த கடிதம் எழுதுகிற விவகாரம் தமிழ்நாட்டிற்கு பொருந்துமா? இல்ல நேரில் சந்தித்துப் பேசுவது சரியாக இருக்குமா?
பதில்: ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன், அதாவது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, கர்நாடகத்தில் இதே பிரச்சனை, 100 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கக்கூடிய பிரச்சனை காவேரி பிரச்சனை. அந்த நேரத்தில் அங்க வந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்க இருந்த அரசுக்கு நான் கண்டனம் தெரிவித்தோம், தீர்மானம் கொண்டு வந்தோம், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியினுடைய சார்பில் தீர்மானம் கொண்டு வந்தோம். தமிழகத்தினுடைய எதிர்காலம் என்று சொல்வது நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் நிறைவேறிவிடும் என்கின்ற ஒரு நிலைப்பாடு எடுப்பதன் மூலமாக வந்துவிடாது. ஆட்சியில் இருக்கும்போது எதெல்லாம் தடையாக இருக்கிறதோ தமிழகத்தினுடைய முன்னேற்றத்திற்காக, விவசாயிகளுடைய முன்னேற்றத்திற்காக, பெண்கள் முன்னேற்றத்திற்காக, கல்வி முன்னேற்றத்திற்காக அனைத்திலும் வெளிப்படையான ஒரு அணுகுமுறை இருந்தாக வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் நம்முடைய தஞ்சை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது, அதற்குத் தக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தமிழக முதல்வர் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
கேள்வி: அதிமுகவில் ஒரு பிரச்சனை போயிட்டு இருக்கு, உங்களுடைய கூட்டணி கட்சியில். 3 எம்எல்ஏக்கள் இன்று தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, தவெகவோட தங்களுடைய அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது EPS அணியில் இருந்து இன்னும் தொடருமா? இந்த மாதிரியான நிலைப்பாட்டை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
பதில்: நீங்க ஒரு நபரையே சொல்லியாச்சு, அது அவர்கிட்ட கேட்க வேண்டிய விஷயங்கள். எங்களோட கூட்டணி கட்சியாக அவர்கள் பயணித்தார்கள், அவங்க அது சம்பந்தமான முடிவுகளை நிச்சயமாக எடுப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
கேள்வி: கூட்டணியில் இருந்த வரைக்கும் வார்த்தை துறக்காமல் காங்கிரஸ் தான் எங்களோட பலம் அப்படின்னு சொல்லிட்டு இருந்த திமுகவில், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்றாருன்னா, பாஜகவோட தொடர் வெற்றிக்கு வந்து காங்கிரஸ் தான் உறுதுணையாக இருக்கு அப்படின்ற மாதிரியான குற்றச்சாட்டை சொல்றாரு, இது எப்படி எடுத்துக்கிறது?
பதில்:
இல்லை நான் ஒரு விஷயத்தில் வந்து கலைஞர் அவர்களுடைய வார்த்தைகளில் நிறைய விஷயம் இருக்கு, அதுல எனக்கு ரொம்ப பிடித்தமான ஒரு விஷயம் கூடா நட்பு கேடில் முடியும். இது கலைஞர் அவர்களே சொன்ன வார்த்தை. இது காங்கிரசுக்கு மட்டும் சொன்ன வார்த்தை அல்ல, திமுகவுக்குச் சொன்ன வார்த்தை, ஸ்டாலின் அவர்களுக்குச் சொன்ன வார்த்தை, தன்னுடைய தகப்பனாருடைய வார்த்தையை அவர் மதிக்கத் தவறிய காரணத்தினாலே இதற்கு முன்னாடி தமிழகம் துயரங்களை அனுபவித்திருக்கின்றது. இன்னைக்கு அவருடைய குடும்பம் நேரடியாக இதற்கு முன்னாடியும் அனுபவித்திருக்கிறது, இப்பவும் அனுபவிக்குது, அது தொடர்கதையாக போகக்கூடிய அளவுக்கும் இருக்கிறது. இன்னைக்கு மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பழைய துணை முதல்வர் அவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்றாங்க, முதுகில் குத்திவிட்டார்கள் காங்கிரஸ் ஆனால் கழுத்தை வெட்டிப் போட்டிருக்குது, காங்கிரஸ். திமுக முடிந்து போயிருச்சு, முடித்தது வேறு யாருமே கிடையாது. கலைஞர் கழுத்துக்கு கத்தி வச்ச அதே காங்கிரஸ் கட்சியை நீங்க எடுத்து கொஞ்சினீங்க. பீடம் தெரியாமல் சாமி ஆடுறதுன்னு சொல்லுவாங்க, எந்த சாமி ஆடுறேன்னு சாமி ஆடுறவனுக்கு தெரியாது. ஒரு துரோகி காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் சற்றும் அருகதையற்ற ஒரு தலைவரை உலகத் தலைவர் நரேந்திர மோடிஜி அவர்களுக்குப் போட்டியாக இவர்தான் பிரதம மந்திரி வேட்பாளர்னு கொண்டு வந்து களத்தில் இறக்கினீங்கல்ல, இதுவும் வேண்டும், இனனும் வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.சி.ஆர் @ சந்திரசேகர், மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், மாநில கல்வியளார் அணி ஆ.ராம்குமார், உதயம் சேகர் உள்ளிட்ட பல முக்கிய மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.