Perambalur: A resolution was passed at the Tamil Nadu Farmers’ Association executive committee meeting urging the Tamil Nadu government to issue a new government order waiving 50 percent of farmers’ loans.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வினயா மினி ஹாலில் மாநில செயலாளர் ஆர். ராஜா சிதம்பரம் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் வி.நீலகண்டன், மாவட்ட பொருளாளர் அ.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வட்டாரங்களிருந்து பொறுப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செயற்குழுவில், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் அவரது தேர்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகளின் கடன் முழுவதும், ஏனைய விவசாயிகளின் கடனில் 50 சதவீத தள்ளுபடி செய்வதாக அறிவித்தபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றுகின்ற வகையில் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்காத வகையில் குழப்படியான தள்ளுபடி திட்ட அறிவிப்புகளை கைவிட்டு, அவரது தேர்தல் வாக்குறுதிப்படி சிறு, குறு விவசாயிகளின் கடன் முழுவதும், ஏனைய விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்திடும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு கணக்கிடும் போது காப்பீடு செலுத்தும் ஆண்டிற்கு முந்தைய 5 ஆண்டுகளின் சராசரி விளைச்சல் அடிப்படையில் கணக்கீடு செய்வதை மாற்றி அந்தந்த ஆண்டு சராசரி விளைச்சல் அடிப்படையில் இழப்பீடு கணக்கிடும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்திட மத்திய அரசு ஆணைபிறப்பித்திடவும்,
மத்திய அரசின் வேளாண் விலை நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவிப்பது, மற்றும் மத்திய அரசு ஆண்டுதோறும் அறிவிக்கும் விவசாய விளைபொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை ஆகியவை தற்பொழுது வரை நடைமுறைப்படுத்தப்படாமல் வெற்று அறிவிப்பாக இருப்பதை மாற்றி அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றிடவும்,
தருமபுரியில் ஜுலை 5 அன்று நடைபெற உள்ள உழவர் தின பேரணியில் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக பெருந்திரளாக விவசாயிகள் கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்திற்கு மாவட்ட, வட்டார நிர்வாகிகள் புதிதாக தேர்தெடுக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.