பெரம்பலூர்: சட்டமன்றத் தேர்தல் நேர்மையான வெளிப்படையுடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்; கலெக்டர் தகவல்!

schedule
2026-04-22 | 08:53h
update
2026-04-22 | 08:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: All arrangements are in place to conduct the Assembly election in a fair and transparent manner; Collector informs.

நாளை 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மிருணாளினி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 147. பெரம்பலூர்(தனி) மற்றும் 14.குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 732 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்கள் எளிதில் சென்று வர சாய்தள வசதிகள், சக்கர நாற்காலிகள், உதவியாளர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வெயில் காலம் என்பதால், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீருடன் ஓ.ஆர்.எஸ். கரைசல் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் 3,512 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். பாதுகாப்பு பணியில் 840 காவலர்கள், இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்புப்படையினர் 176 நபர்களும், ஊர்க்காவல் படையினர் 215 நபர்களும், முன்னார் இராணுவத்தினர் – சிறைத்துறையினர், தீயணைப்புத்துறையினர் என மொத்தம் 1,246 நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வி.களத்தூரில் உள்ள வண்ணாரம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாதிரி வாக்குச்சாவடியாகவும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி பெண்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியாகவும், நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி இளைஞர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல, குன்னம் சட்டமன்ற தொகுதியில் இலைக்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாதிரி வாக்குச்சாவடியாகவும், குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி பெண்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியாகவும், சிறுகன்பூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி இளைஞர்கள் பணிபுரியும் வாக்குசாவடியாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை பெரம்பலூர் தொகுதியில் 6 வழக்குகளும், குன்னம் தொகுதியில் 17 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உரிய ஆணவங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக தொகை மற்றும் பொருட்கள் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவினரால் கைபற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை ரூ.3,21,48,570ம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் ரூ.22,69,330ம் என மொத்தம் ரூ.3,44,17,900 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.16,36,570 மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் ரூ.6,70,830 என மொத்தம் ரூ.23,07,400மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வெப் காஸ்டிங் மூலம் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது. ஒரே மையத்தில் அதிக வாக்குச்சாவடி மையங்கள் உள்ள இடங்களில் வாக்காளர்கள் வசதிக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் ஒரு நிறக்குறியீடு வழங்கப்பட்டு அந்த நிறத்திலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நேர்மையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. எனவு அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்து தவறாமல் உங்கள் வாக்கினை செலுத்திட வேண்டும், என தெரிவத்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 09:13:28
Privacy-Data & cookie usage: